பெங்களூரு:
கவுரி லங்கேஷைப் போல, மேலும் 34 எழுத்தாளர்களையும், பகுத்தறிவாளர்களையும் கொலை செய்வதற்கு இந்துத்துவா கும்பல் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக கர்நாடக சிறப்புப் புலனாய்வுக்குழு தெரிவித்துள்ளது.மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர், இடதுசாரி எழுத்தாளர்கள் கோவிந்த் பன்சாரே, எம்.எம். கல்புர்கி ஆகியோர் அடுத்தடுத்து துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில், நான்காவது நபராக, கர்நாடகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான கவுரி லங்கேஷ், அவரது வீட்டின் முன்பாகவே சுட்டுக் கொல்லப்பட்டார். இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனினும் கர்நாடக சிறப்புப் புலனாய்வுக்குழுவினர் தீவிர விசாரணை நடத்தி, இதுவரை 60 பேருக்கும் மேற்பட்ட- இந்துத்துவா பயங்கரவாதிகளை கைது செய்துள்ளனர். இவர்களில் பரசுராம் வாக்மோர் என்பவர், லங்கேஷை கொன்றது தான்தான் என்றும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கர்நாடகாவைச்சேர்ந்தவர்கள். ஏனையோர் மகாராஷ்டிரா மற்றும் கோவாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஆயுதப்பயிற்சி அளிக்கப்பட்டு, சனாதன் சன்ஸ்தா உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புக்களால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் என்பதும் விசாரணையில் உறுதியாகி உள்ளது.மேலும், இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரி ஒன்றில் நாடு முழுவதும் உள்ள 34 எழுத்தாளர்களை, இவர்கள் கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்தது அம்பலமாகியுள்ளது. குறிப்பாக, கர்நாடகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கிரிஷ் கர்நாட், நிதுமாமிதி மடத்தைச்சேர்ந்த சென்னமாலா சாமி, பகுத்தறிவாளர்கள் கேஎஸ். பகவான் மற்றும் நரேந்திர நாயக் ஆகிய நால்வரை ஒரே நாளில் கொல்லவும் இந்துத்துவ பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.