சென்னை,
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதியளித்த மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-காவிரி டெல்டா பகுதிகளில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு, இரண்டு இடங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும், ஒரு இடம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு, மக்கள் ஏகோபித்த எதிர்ப்பு தெரிவித்த நிலையில், “தமிழக அரசின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது” என்று கூறி ஏமாற்றி வந்த மத்திய பாஜக அரசு, இப்போது திடீரென்று மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கியிருப்பது, தமிழக வேளாண்மை முன்னேற்றம் பற்றியோ, தமிழக விவசாயிகளின் பாதுகாப்பு பற்றியோ மத்திய அரசு துளியும் கவலைப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் துயரம் மறைவதற்குள், ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி சுற்றுப்புறச்சூழலைக் கெடுத்து வரும் அதே வேதாந்தா நிறுவனத்திற்கு, மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்க இடங்களை மத்திய அரசு ஒதுக்கியிருப்பது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை அடக்குவதில் மத்திய பாஜக அரசும் தமிழகத்தில் உள்ள அதிமுக அரசுக்கு உறுதுணையாக இருந்து “அரச பயங்கரவாதத்தை” அப்பாவி மக்கள் மீது இரண்டு அரசுகளும் இணைந்து கட்டவிழ்த்து விட்டது உண்மையாகியிருக்கிறது. வெகுமக்கள் விரோத திட்டங்களைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டிவரும் மத்திய பாஜக அரசு, தமிழக மக்களின் பெருந்திரள் போராட்டத்தையும் அடங்கா சினத்தையும் சந்திக்க வேண்டிய கட்டாயமான நிலை உருவாகும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்

Leave a Reply

You must be logged in to post a comment.