திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை (வளர்மதி) பணியாளர்களுக்கு இரண்டு மாதங்களாக குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்காமல் கூட்டுறவு துணைப்பதிவாளர் சண்முகவேல் தடுப்பதாக சிஐடியு, ஏஐடியுசி சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இது தொடர்பாக வளர்மதி அலுவலகம் முகப்பிலேயே பெரிய தட்டி பலகை கட்டிவைத்துள்ளனர். இதில் கூட்டுறவு துணைப் பதிவாளர் சண்முகவேல் அந்தந்த மாதத்திற்கான பணியாளர் ஊதியத்தையும், அரசின் சலுகைகளையும் அரசிடம் இருந்து உடனே பெற்றுக் கொண்டாலும், நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இரு மாதங்களாக தடுத்து வருவதாக பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். சொந்த நாட்டிலேயே அடிமைகளாக வாழும் நிலையில் ரேசன் கடைஊழியர்கள் இருப்பதாக மனக்குமுறலை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். ஊழியர்களுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிக்கும் அதேசமயம் மளிகை பொருட்கள் வழங்கும் வியாபாரிகளுக்கு மட்டும் முன்பணம் காசோலையாக வழங்குவதாகவும் தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஊழியர்களை பழிவாங்கும் போக்கில் துணை பதிவாளர் சண்முகவேல் செயல்படுவதாகவும், பண்டகசாலையை முடக்கும் காரியத்தில் ஈடுபடுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் தமிழக அரசு கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய மானியங்களை உடனே வழங்க வேண்டும் என்றும் இரு சங்கங்களின் நிர்வாகிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.