புதுதில்லி;
முஸ்லிம் ஒருவரை படுகொலை செய்ததற்காக, பசு குண்டர்களுக்கு மாலை அணிவித்தும், தடபுடலான விருந்து அளித்தும் மாட்டிக்கொண்டவர், மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா.

தானொரு மத்திய அமைச்சர் என்பதையும் மறந்துவிட்டு, குற்றவாளிகளுடன் அவர் கைகோர்த்து நின்றது, நாடு முழுவதும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கடும் கண்டனத்திற்கு உள்ளானது.இந்நிலையில்தான், ஆட்டோ, ரிக்‌ஷா பயணக் கட்டணத்தைவிட விமான பயணக் கட்டணம் குறைவாக இருப்பதாக கூறி, ஜெயந்த் சின்ஹா மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் விமான நிலையத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள உள்நாட்டு விமான முனையக் கட்டடத்தைத் திறந்துவைத்து, செவ்வாயன்று ஜெயந்த் சின்ஹா பேசியுள்ளார். அப்போதுதான், “மோடி ஆட்சியில் ஆட்டோவில் செல்வதை விட விமானக் கட்டணம் தற்போது குறைவாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

“இது எப்படி சாத்தியமாகும் என்று நீங்கள் கேட்கலாம்?” என்று ஜெயந்த் சின்ஹாவே கேள்வி எழுப்பிவிட்டு, “இரண்டு பேர் ஆட்டோவில் அல்லது ரிக்‌ஷாவில் செல்வதற்காக ரூ. 10 தருகிறீர்கள்; அதாவது அவர்களுக்கு கிலோ மீட்டருக்கு 5 ரூபாய் என்று கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது; ஆனால் நீங்கள் விமானத்தால் செல்லும்போது அதே ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 4 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது” என்று விளக்கம் அளித்துள்ளார்.

“இந்த வகையில் ஆட்டோவைவிட, மலிவான விமான பயணத்தை மோடி ஆட்சி வழங்குகிறது” என்றும் தனக்குத்தானே கைதட்டிக் கொண்டுள்ள ஜெயந்த் சின்ஹா, “முன்பு நம் நாட்டில் 75 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன; ஆனால் இன்று இந்தியா முழுவதும்100 விமான நிலையங்கள் உள்ளன” என்றும் பெருமைப் பீற்றியுள்ளார்.பெட்ரோல் – டீசல் உட்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால், சாதாரண ஏழை- எளிய நடுத்தர மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், விமானக் கட்டணத்தைக் குறைவாகத்தான் வைத்திருக்கிறோம் என்று ஜெயந்த் சின்ஹா கூறியிருப்பதை, எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.

Leave A Reply

%d bloggers like this: