சேலம்,
குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தராத தம்பம்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் காலிகுடங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க மேட்டூர் – ஆத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமும், ஆழ்துளை கிணறு மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உள்ளாட்சி நிர்வாகத்தில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் கிராமமக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க அதிகாரிகள் முன்வராத நிலை இருந்து வருகிறது. குறிப்பாக, கடந்த 25 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

அதுவும், மேட்டூர் காவிரியாற்றில் தண்ணீர் கரைபுறண்டு ஓடும் நிலையில் அருகிலுள்ள தம்மம்பட்டி பகுதிக்கு 25 நாட்களாக முறையாக குடிநீர் வழங்காததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் தம்பம்பட்டி பேருந்து நிலையம் முன்பு புதனன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முறையாக குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பேரூராட்சி பகுதியில் உள்ள 18 வார்டு பகுதிகளுக்கும் அடிப்படை வசதிகளை செய்து தராத தமிழக அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.