மும்பை:
பெண்கள் காதலிக்க மறுத்து விட்டாலும், பாஜக தொண்டர்களும், அவர்களின் பெற்றோரும் விரும்பி விட்டால், அந்தப் பெண்களை கடத்திக் கொண்டு வந்து விடுவேன் என்று மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ராம் கதம் என்ற எம்எல்ஏ கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்கெனவே பெண் கடத்தல், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், பாஜக-வைச் சேர்ந்த ஆளும்கட்சி எம்எல்ஏ ஒருவரே இவ்வாறு மிரட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, மகாராஷ்டிர மாநிலத்தில் திங்கட்கிழமையன்று ‘தஹிஹண்டி’ எனப்படும் உறியடி நிகழ்ச்சிகள் நடந்தன. காட்கோபரில் அத்தொகுதி பாஜக எம்எல்ஏ-வான ராம் கதம் என்பவரே உறியடியை முன்னின்று நடத்தியுள்ளார்.அப்போது அங்கு திரண்டிருந்த இளைஞர்களை நோக்கிப் பேசிய ராம் கதம் எம்எல்ஏ, “நாங்கள் விரும்பும் பெண்கள் காதலை ஏற்க மறுக்கிறார்கள் என பல இளைஞர்கள் என்னிடம் உதவி கேட்கிறார்கள்; அவர்களுக்கு நான் நூறு சதவிகிதம் இதில் உதவி செய்வேன்; நீங்கள் உங்களது பெற்றோரை அழைத்து கொண்டு என்னிடம் வாருங்கள்; நீங்கள் காதலிக்கும் பெண்ணை பெற்றோருக்கும் பிடித்து விட்டால், அந்த பெண்ணை நான் கடத்தி கொண்டு வந்து உங்களிடம் கொடுத்து விடுகிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், தன்னுடைய செல்போன் எண்ணை குறித்து வைத்து கொள்ளுங்கள் என்று தனது செல்போன் எண்ணையும் தந்துள்ளார்.பாஜக எம்எல்ஏ ராம் கதமின் இந்த பகிரங்கமான மிரட்டல் பேச்சு சமூகவலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவரது பொறுப்பற்ற இந்த பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்து உள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.