புதுதில்லி;
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவற்றால் சிறு, குறு தொழில்கள் நசிந்து போனதும், இத்தொழில்களை நம்பி கடன் கொடுத்த வங்கிகள் தற்போது கடுமையான வராக்கடன் பிரச்சனையை எதிர்கொண்டிருப்பதும் ரிசர்வ் வங்கி அறிக்கை மூலம் அம்பலமாகி இருக்கிறது.
சிறு, குறு தொழில்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. அதற்கு தற்போது பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, ‘சிறுகடன்கள் மீதான வராக்கடன் கடந்த ஓராண்டில் 2 மடங்கு அதிகரித்து விட்டது’ என்று தெரிவித்துள்ளது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகிய இரண்டுமே இந்தியப் பொருளாதாரத்தை கடுமையாக சீர்குலைத்து விட்டன.ஒரு அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 72 ரூபாயாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. பெட்ரோல் – டீசல் விலைகள் வரலாற்றில் இல்லாத அளவிற்கு 100 ரூபாயை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.கறுப்புப் பணத்தை கைப்பற்றி, இந்திய பொருளாதாரத்தை உயர்த்தப் போகிறேன் என்று மோடி கூறினார். ஆனால், 10 ஆயிரம் கோடி கறுப்புப் பணத்தை ஒழிக்க, சுமார் 3 லட்சம் கோடி ரூபாயை இழந்ததுதான்- மோடி அரசின் பணமதிப்பு நீக்க சோகமாகி விட்டது.
2016 நவம்பர் 8-க்குப் பிறகு, டெபாசிட்தாரர்களின் பணத்தையே கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வங்கிகள் தந்தன.

ஆனால், இதே காலத்தில்தான் போலி ஆவணங்களை ஏற்றுக்கொண்டு, பண உத்தரவாதக் கடிதம் மூலம் வகைதொகையின்றி பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான கடன்களை வங்கிகள் வழங்கியுள்ளன. இதில் சுமார் 41 ஆயிரம் கோடி ரூபாயை இந்திய வங்கிகள் இழந்துள்ளன.

இந்நிலையில்தான், புதிதாக சிறு மற்றும் குறுதொழில் முனைவோர் என்ற பெயரில் வாங்கப்பட்ட கடன்களும் பெருமளவில் திரும்பவில்லை; 2016-17 நிதியாண்டில் 8 ஆயிரத்து 249 கோடியாக இருந்த வராக்கடன்கள், 2017-18 நிதியாண்டில்- சுமார் 2 மடங்கு அளவிற்கு, 16 ஆயிரத்து 118 கோடியாக அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது.ஏற்கெனவே, உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கு 6 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்துவிட்டு, அவற்றை மோடி அரசு வராக்கடன் ஆக்கி விட்டது. தற்போது, சிறுகடன்களிலும் பெருமளவு தொகை வராக்கடன் ஆகியுள்ளது.

இதுதொடர்பாக பட்டியல் ஒன்றை அளித்துள்ள ரிசர்வ் வங்கி 2016 மார்ச் முதல் 2017 மார்ச் வரையில் மொத்தம் வழங்கப்பட்ட 9 லட்சத்து 83 ஆயிரத்து 655 கோடி ரூபாய் கடனில், வராக்கடன் 82 ஆயிரத்து 382 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது 2018 மார்ச் வரை 10 லட்சத்து 49 ஆயிரம் கோடி ரூபாய் சிறுகடன்களாக வழங்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 98 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வராக்கடன் ஆகியிருப்பதாக கூறியுள்ளது.

ரிசர்வ் வங்கியின் தரவுகள் அடிப்படையில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை, சிறுகடன் துறையில் வராக்கடன் அதிகரிப்புக்கும் பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.“பணமதிப்பு நீக்கத்தையொட்டி, சிறு, குறு தொழிலதிபர்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் போனது. பணப்புழக்கம் குறைந்ததே இதற்கு காரணம். இதனால் தொழிலாளர்கள் சரிவர வேலைக்கு வரவில்லை. தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் உற்பத்தி குறைந்தது. ஒரு கட்டத்தில் தொழில்களே நின்று போயின. இதனால் வங்கியில் வாங்கிய கடனை சிறு, குறு தொழிலதிபர்களால் திருப்பிச் செலுத்த முடியவில்லை.
அதேபோல ஜிஎஸ்டி அமலாக்கமும் இப்பிரச்சனையில் முக்கியக் காரணம். துவக்கத்தில் ஜிஎஸ்டி-யில் பெரும் குளறுபடிகள் இருந்தன. இதுவும் தொழில்கள் நசிவுக்கும், அந்த தொழில்களுக்க வழங்கப்பட்ட கடன்கள் வராக்கடன்கள் ஆனதற்கும் முக்கியக் காரணம்” என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: