நாமக்கல்,
கோகுல்ராஜ் கொலை வழக்குதொடர்பான சாட்சிகள் விசாரணை வியாழனன்று மீண்டும் தொடர்ந்து நடைபெறுகிறது.

சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியாளர் பட்டதாரியான கோகுல்ராஜ் (23) கடந்த2015 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதியன்று பள்ளிபாளையம் அருகேயுள்ள ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக நாமக்கல் சிபிசிஐடி காவல்துறையினர் சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை உட்பட 17 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட யுவராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனார்.  இந்த வழக்கு தொடர்பான சாட்சிகள் விசாரணை கடந்த ஆக.30 ஆம் தேதி முதல் நாமக்கல் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. செவ்வாயன்று மூன்றாவது நாளாக நடைபெற்ற இந்த வழக்குவிசாரணை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள யுவராஜ் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். இதில், அரசு சார்பில் இரண்டாவது சாட்சியான கோகுல்ராஜின் சகோதரர் கலைசெல்வனிடம் விசாரணை நடைபெற்றது.

இதன்பின்னர் வழக்கு விசாரணை வியாழனன்று (செப்.6) ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிமன்றவளாகத்தில் இருந்து அனைவரும் வெளியே வந்த நிலையில்யுவராஜ் தரப்பினர், கோகுல்ராஜ் தரப்பினருடன் திடீரென தகராறில் ஈடுபட்டனர். இதற்கு கோகுல்ராஜ் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானபடுத்தினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதற்கிடையே வழக்கு விசாரணைக்காக வந்த கோகுல்ராஜின்தாய் சித்ரா, சகோதரர் கலைச்செல்வன் மற்றும் உறவினர்களை நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம், சிஐடியு நாமக்கல் மாவட்ட செயலாளர் வேலுசாமி, சுரேஷ்ஆகியோர் சந்தித்து வழக்கின் போக்குகள் குறித்து விசாரித்ததுடன், அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.