திருப்பூர்,
திருப்பூரில் கட்டுப்பாடின்றி பெருகி வரும் தெரு நாய்களால் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. தொழில் நகரமான திருப்பூரில் இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக உள்ளது. மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் இந்நகரில் புழக்கத்தில் உள்ளன. அதேசமயம் சாலைகள் குறுகியதாகவும், நெருக்கடி மிக்கதாகவும் உள்ள நிலையில் இருசக்கர வாகன விபத்துகள் நேர்வது தொடர் கதையாக உள்ளது.

இது போதாதென்று அண்மைக் காலமாக திருப்பூர் நகரின் எல்லா பகுதிகளிலும் தெரு நாய்கள் பெரும் எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றன. குடியிருப்புகள் மட்டுமின்றி சாலைகளிலும் அவை சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. குறிப்பாக திருப்பூரை மையப்படுத்தி செல்லும் அவிநாசி – அவிநாசிபாளையம் தேசிய நெடுஞ்சாலை, பெருமாநல்லூர் சாலை, ஊத்துக்குளி சாலை, பல்லடம் சாலை என பிரதான சாலைகளில் ஆங்காங்கே நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இந்நிலையில் பரபரப்பான போக்குவரத்து மிகுந்த காலை, மாலை வேளைகளில் கூட நாய்கள் சாலையில் குறுக்கும், நெடுக்குமாக திடீரென கடந்து செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்த விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.அனுப்பர்பாளையம் பேருந்து நிறுத்தப் பகுதியில்இந்த நாய்கள் தொல்லையால் பல்வேறு விபத்துகளும் நடந்துள்ளன. புதனன்று காலையும் இப்பகுதியில் நாய்கள் சாலையில் திடீரென கூட்டமாய் சென்றபோது இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் தூக்கி வீசப்பட்டு அவரின் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன. அவரது வாகனமும் கடும் சேதமடைந்தது. நாய்களின் போக்கை கணிக்க முடியாத நிலையில் வாகன ஓட்டிகள் நிலை குலைந்து விபத்தில் சிக்குகின்றனர். திருப்பூரில் இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. எனவே பள்ளிக்குழந்தைகள், பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த அசம்பாவித சம்பவங்களை தடுக்க மாநகராட்சி மூலம் நாய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் கோருகின்றனர். நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை அளித்து நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக முன்பு மாநகராட்சி நிர்வாகம் கூறி வந்தது. இப்போது அந்த பணி நடைபெறுவதாக தெரியவில்லை. மக்கள் பிரதிநிதிகளும் இல்லாத நிலையில் இதைப் பற்றி மாநகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. திருப்பூரில் அதிகரித்து வரும் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.