தீக்கதிர்

தூத்துக்குடி குரல் கோட்டையில் எதிரொலிக்கும்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது, காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப் பட்டனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொடூரமாக தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தனர். அதில் சிலர் நிரந்தர மாற்றுத்திறனாளிகளாக மாற்றப்பட்டுவிட்டனர்.

திருப்பூரில் நடைபெற்ற மாற்றுததிறனாளிகள் சங்கத்தின் 3ஆவது மாநில மாநாட்டில் தூத்துக்குடி போராளிகளைப் பாராட்டி சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதிநிதிகள் மாநாட்டின் தொடக்க நிகழ்வில் இவர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர். தூத்துக்குடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பரமசிவன் (43). இவருக்கு இரு பி.காம் படிக்கும் மகள், பிளஸ் 2 படிக்கும் மகன் உள்ளனர். காவல்துறை துப்பாக்கியால் சுட்டதில் தொடையில் குண்டடிப்பட்டு காயம் ஏற்பட்டு கால் ஊனமானது. அத்துடன் முதுகிலும் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேபோல் தங்கம் என்ற பெண் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். போராட்டத்தின் போது இவரது இடது கையை காவல் துறையினர் முறுக்கி உடைத்துவிட்டனர். இப்போது அந்த கை வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு அரசு தலா ரூ.5 லட்சம் அறிவித்தது. ஆனால் இவருக்கு பணம் தர மறுத்துவிட் டது. இடதுசாரி கட்சியும், காப்பீட்டு ஊழியர் சங்கமும் தங்களால் இயன்ற அளவிற்கு ரூ.25 ஆயிரம் வழங்கினர். அதன் பிறகு அரசு தரப்பில் ரூ.5 ஆயிரம் வழங்கப் பட்டது. ஆனால், கை வேலை செய்ய முடியாத நிலையில் இவருக்கு உதவித் தொகை தருவதுடன், அரசு வேலை வழங்க வேண்டும் என்று அறிமுகப்படுத்தினர்.

மற்றொருவர் ராமச்சந்திரன் (23) என்ற இளைஞர். திருமணம் ஆகவில்லை. நேதாஜி நகரைச் சேர்ந்த இவர் கொட்டுமுழக்கம், தாரை தப்பட்டையுடன் போராட்டத்துக்குச் சென்றவர். காலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கடும் ஊனம் ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் முழுமையாக குணமாகவில்லை. அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அறிமுகப்படுத்தப்பட்டார். ஊனமடைந்தவர்களில் இளவயதுக்காரர் ராஜாசிங் (19). மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் பஞ்சர் கடையில் வேலை செய்து வந்தவர். மக்கள் போராட் டத்தின் எழுச்சியைப் பார்த்து அதில் பங்கேற்கச் சென்றவர். காவல் துறையினர் மறைந்திருந்து சுட்டதில் கால் முட்டிக்குக் கீழாக காயமடைந்தார். இறந்துவிட்டதாக கருதிதூக்கி வீசிவிட்டுச் சென்றனர். நண் பர்கள் அவரைக் காப்பாற்றினர். அதேபோல் தூத்துக்குடி போல் டன்புரத்தைச் சேர்ந்த பெயிண்டர் ஆனந்த கண்ணன் (35). மிகப் பெரிய கட்டிடங்களில் மேலே ஏறிவர்ணம் பூசும் வேலை செய்தவர். காவல்துறை துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 60 சதவிகிதம் ஊனம் ஏற்பட்டு விட்டது. இனிமேல் அவரால் பெயிண்டிங் வேலை செய்ய முடியாது. 3 குழந்தைகளுடன் வறுமையான குடும்பம். எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது என்று இவரை அறிமுகப்படுத்தினர்.

அறிமுகப்படுத்தப்பட்ட பின் பரமசிவனுக்கு மாநிலத் துணைத் தலைவர் தே.லட்சுமணன், ராமச் சந்திரனுக்கு நீதிபதி சந்துரு, ராஜா சிங்கிற்கு ஊனமுற்றோர் உரிமைக்கான தேசிய மேடை செயலாளர் வி.முரளிதரன், தங்கத்துக்கு மாநிலத் தலைவர் பா.ஜான்ஸிராணி, ஆனந்த கண்ணனுக்கு செயலாளர் நம்புராஜன் ஆகியோர் கதராடை அணிவித்து “களப்போராளி” என கேடயம் வழங்கி பாராட்டினர். அப்போது விண்ணதிரும் முழக்கங் களுடன் போராளிகளுக்கு மாநாட்டுப் பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்தனர். இவர்கள் மட்டுமின்றி காவல் துறையின் தாக்குதல் அச்சத்தின் காரணமாக பலர் வெளியே சொல் லாமல் இருக்கின்றனர். பிரின்ஸ் என்ற இளைஞர் தாக்குதலில் ஒரு காலை இழந்த நிலையில் திருச்சி மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது குரல் ஒலிப்பதிவை மாநாட்டில் ஒலிபரப்பினர்.

நிறைவாக மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி பேசுகையில், கண்மூடி கண் திறப்பதற்குள் ஒரு நொடிக்குள் இவர்கள் மாற்றுத் திறனாளிகளாக மாற்றப்பட்டு விட்டனர். இவர்கள் வாழ்க்கை சிதைந்து போனது. இவர்களுக்கான உரிமைகள், நியாயங்கள் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. தூத்துக்குடியில் ஒலித்த குரல் சென்னை கோட்டையில் எதிரொலிக்கும் என்றார்.