திருப்பூர்,
திருப்பூரில் நூறு கிலோ குப்பைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் 5 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் உள்ள குடியிருப்பு வளாகங்கள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து மேலாண்மை செய்ய வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016ன்படி இந்நகரில் தினமும் 100 கிலோ குப்பைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், உணவு விடுதிகள் மற்றும் பிற நிறுவனங்கள், அலுவலகங்கள், விடுதிகள் மற்றும் 5 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவு கொண்ட குடியிருப்புவளாகங்கள் மற்றும் நிறுவனங்களில் சேகாரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்க வேண்டும். அதில் மக்கும் குப்பைகளை தங்கள் வளாகத்திற்குள்ளேயே மாநகராட்சியின் வழிகாட்டுதலின்படி உரமாகவோ அல்லது உயிரி வாயுவாக உற்பத்தி செய்ய வேண்டும், மக்காத குப்பைகளை தனியாக மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட குப்பை சேகரிப்பவர்களிடமோ அல்லது மறு சுழற்சி செய்பவர்களிடமோ ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதன்கிழமை மாநகராட்சி ஆணையர் க.சிவகுமார் தலைமையில் தனியார் நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரும் செப்டம்பர் 15க்குள் தங்களது வளாகத்தில் குப்பைகளை மேலாண்மை விதிகள் கூறப்பட்டு உள்ளது போல செயல்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் 2016ன் படி சம்பந்தபட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் க.சிவகுமார் கூறினார்.

பலனளிக்குமா திட்டம்?
தொழில் நகரமான திருப்பூரில் திடக்கழிவு மேலாண்மை என்பது கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தோல்வி அடைந்த திட்டமாகவே உள்ளது. எத்தனையோ திட்டங்களைத் தீட்டியும் இப்பிரச்சனையை மட்டும் மாநகராட்சியால் தீர்க்க முடியவில்லை. போதாக்குறைக்கு குப்பை அகற்றும் பணியை இரண்டு மண்டலங்களை உள்ளடக்கி 30 வார்டுகளில் தனியாருக்கு கொடுத்துள்ளனர். அங்கு ஊழல் முறைகேடு தலைவிரித்து ஆடுவதுடன், முறையாக குப்பை அகற்றமும் நடைபெறுவதில்லை.இந்த சூழ்நிலையில் திடக்கழிவு மேலாண்மைக்கு இந்தியா முழுவதும் எங்குமே நிரூபிக்கப்பட்ட வழிமுறை ஏதும் இல்லை என்றும், வல்லுநர்கள் மூலம் ஆய்வு செய்து புதிய வழிமுறையை கண்டுபிடித்து செயல்படுத்த உள்ளதாகவும் முந்தைய மாநகராட்சி ஆணையர் எம்.அசோகன் கூறியிருந்தார். ஆனால் இப்போது ஆணையர்மாறிய நிலையில் திடக்கழிவு மேலாண்மைக்கு சம்பந்தப்பட்டநிறுவனங்கள், குடியிருப்பாளர்களையே பொறுப்பாக்கும் நடைமுறையை அறிவித்துள்ளார்.

திடக்கழிவு மேலாண்மையைப் பொறுத்தவரை மாநகராட்சி நிர்வாகம் மட்டுமே முழுமையாக பொறுப்பேற்று வெற்றி பெற்று விட முடியாது. உள்ளூர் தொழில் வர்த்தகத் துறையினர், பொதுமக்கயின் பங்கேற்பும், ஒத்துழைப்பும் அவசியம் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் இப்போது சொல்லியிருக்கும் புதிய திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிப்பதும், அதில் மக்கும் குப்பையை அந்தந்த வளாகத்திலேயே உரமாகவோ, உயிரி வாயுவாகவோ மாற்ற வேண்டும் என்ற உத்தரவும் எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியமானது, எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நகரின் தன்மைக்கு பொருத்தமான ஒரு தீர்வை கண்டறிந்து அனைத்து தரப்பினர் ஒத்துழைப்புடன் முயற்சி மேற்கொண்டால்தான் திடக்கழிவு மேலாண்மை திட்டம் வெற்றி பெறுவது சாத்தியம். இல்லாவிட்டால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட எத்தனையோ திட்டங்களில் ஒன்றாக இதுவும் ஏட்டுச் சுரைக்காயா
கவே மாறிவிடும் நிலைதான் ஏற்படும்!

-(ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.