திருநெல்வேலி:
இதுவரை தாமிரபரணியில் மகாபுஷ்கரம் எனும் மத விழா நடந்ததற்கான ஆதாரம் ஏதுமில்லை என்றும் இந்த விழா நடந்தால் தாமிரபரணி ஆறு சுற்றுச் சூழலும் மிக மோசமாகப் பாதிக்கப்படும்; மாசுபாடு அதிகரிக்கும் என்றும் எனவே மகாபுஷ்கரம் எனும் மதவிழாவை அரசுவிழாவாக நடத்தக்கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முதல் அமைச்சர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த விபரம் வருமாறு:
தாமிரபரணியில் எதிர்வரும் அக்டோபர் மாதம் மகாபுஷ்கர் எனப்படும் மதவிழா நடக்க இருப்பதாக பத்திரிகைகளில் தொடர்ந்து செய்தி வெளி வருகிறது. அச்சமயத்தில் பல லட்சம் பேர் தாமிரபரணியில் நீராட இருப்பதாகவும், ஊர்வலங்கள் நடத்த இருப்பதாகவும், இதனை அரசு விழாவாக நடத்த வேண்டுமென்றும் அச்செய்திகள் கூறுகின்றன, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதற்காக தங்களது மேலான கவனத்திற்கு கீழ்க்கண்ட விசயங்களை கொண்டுவர விருப்புகிறோம்.

தவறாக பரப்பப்படும் தகவலை தடுப்பீர்
முதலில் தாமிரபரணியில் இது போன்ற விழா நடந்து இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. 144 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1874ல் தாமிரபரணியில் மகாபுஷ்கர் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் 1881இல் வெளிவந்த கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம் எனும் நூலில் இது போல ஒரு விழா நடந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. மக்கள் மத்தியில் தவறாக பரப்பப்படும் செய்தியை தாங்கள் தடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

கழிவுநீராலும், குப்பைகளை கொட்டுவதாலும் தாமிரபரணி மாசடைந்தே உள்ளது. பல ஆயிரம் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களின் கடும் உழைப்பால் கரையோரங்கள் சீரமைக்கப்பட்டன. அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து மாசற்ற நதியாக மாற்றவும், கரையோரங்களை செம்மைப்படுத்தவும் முயற்சி எடுக்க வேண்டும். விழாக்கள் இதற்கு உதவிகரமாக அமையாது. மாசுபடுபதலை அதிகரிக்கும். 2016இல் அவை யமுனை நதிக்கரையில் ஸ்ரீரவிசங்கர் நடத்திய வாழும் கலை விழாவின் காரணமாக, அழிந்து போன சுற்றுச்சூழலை மீட்டெடுக்க பத்து ஆண்டுகளும், 42 கோடி ரூபாயும் செலவாகும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியதையும், உச்சநீதிமன்றம் 300 கோடி ரூபாய் அபராதம் விதித்ததையும் நினைவுபடுத்த விரும்புகிறோம்.

மாசுபாடே அதிகரிக்கும்
100 மில்லி தண்ணீரில் 500 எம்பிஎன் FACECAL COLIFORM எனும் மலத்தில் காணப்படும் நுண்ணுயிர் இருக்கலாம். ஆனால் சடங்குகள், விழாக்கள் நடக்கும் நதிகளில் 10,000 எம்பிஎன் அளவையும் தாண்டுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பாபநாசத்தில் சுமார் 10,000 சதுர அடி பரப்பளவில் 10 லட்சம் அழுக்குத் துணிகள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். பாவத்தை கழிக்க அணிந்திருந்த அழுக்கு ஆடைகளை ஆற்றில் விட்டதால் ஏற்பட்டதன் விளைவே இது.

மேலும், மகாபுஷ்கரத்தை அரசு விழாவாக நடத்த வேண்டுமென்ற கோரிக்கை சில அமைப்புகளால் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட மதத்தின் விழாவை அரசு நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என குறிப்பிட விரும்புகிறோம். இந்தியா இறையாண்மைமிக்க சமயச்சார்பற்ற நாடு என்ற கொள்கையிலிருந்து அடிபிறழக் கூடாது எனவும் கூற விரும்புகிறோம். மத நடவடிக்கைகளில் அரசு பங்கேற்கக் கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உள்ளதையும் நினைவூட்ட விரும்புகிறோம். மேலும் விழாவிற்கு அரசு நிதி ஏதும் பயன்படுத்தக் கூடாது என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம்.

ஒற்றுமைக்கு பங்கம் நேராமல் பார்த்திடுக
மேலும், தாமிரபரணி நமது தமிழ்ச்சமூகத்தின் மிக தொன்மைமிக்க பண்பாட்டு அடையாளம். நமது தொல் சமூகப் பண்பாடு சாதி, மத பேதமற்றது. ஆதிச்சநல்லூர், கீழடி அகழ்வராய்ச்சிகள் அதனையே மெய்ப்பித்துள்ளன. தாமிரபரணி கரையோரங்களில் பல மதங்களை பின்பற்றுவோர் பல லட்சம் பேர் வேற்றுமை பாராமல் ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றனர். இந்த ஒற்றுமைக்கு பங்கம் வராமல் தடுப்பதும், மக்கள் ஒற்றுமையை பாதுகாப்பதும் தேசப்பற்றுமிக்க மக்கள் மற்றும் அரசு நிர்வாகத்தின் கடமையாகும். எனவே, தாமிரபரணி நதியினையும், சுற்றுச்சூழலையும், மக்களின் நல்லிணக்க வாழ்வு முறையினையும் கருதி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.