கோவை,
சமூக செயற்பாட்டாளர்கள், தலித் செயல்பாட்டாளர்களை கைது செய்த மத்திய பாஜக அரசை கண்டித்து கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்த இடதுசாரி கவிஞர் வரவரராவ், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வெர்னான் கன்சால்வஸ், கவுதம் நவலகா, அருண் பெரைரா மற்றும் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் ஆகிய ஐவரும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசின் இந்த சர்வாதிகார போக்கிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகளும், கண்டன இயக்கங்களும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக புதனன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம் தலைமை வகித்தார். தமுஎகச மாவட்ட செயலாளர் மு.ஆனந்தன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தினேஷ்ராஜா, மக்கள் சிவில் உரிமை கழகத்தின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் ச.பாலமுருகன், எழுத்தாளர் சி.ஆர்.ரவீந்திரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு மத்திய அரசின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: