தீக்கதிர்

கோவை: வன அதிகாரியை தேடும் பணி தீவிரம்

கோவை,
கோவைக்கு பயிற்சிக்கு வந்து மாயமான வன அதிகாரியை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பாஸ்கர் பெகு (51). வன அலுவலரான இவர் கடந்த ஆக.24 ஆம் தேதி கோவை வனக்கல்லூரிக்கு பயிற்சிக்காக வந்தார். சாய்பாபாகாலனியில் உள்ள வன கல்லூரி அலுவலரிடம் பயிற்சிக்கு வந்ததற்கான ஆவணங்களை அளித்துள்ளார். இதன்பின் பயிற்சி வகுப்பு கடந்த 27 ஆம் தேதி துவங்க இருந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதியன்று வெளியில் சென்ற பாஸ்கர் பெகு அறைக்கு திரும்பவில்லை. இதுகுறித்து வனக்கல்லூரி முதல்வர் அசோக்குமார் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தனிப்படை அமைந்து மாயமான வன அதிகாரியை தேடி வருகின்றனர். குறிப்பாக, பாஸ்கர் பெகு தங்கியிருந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் அருகிலுள்ள மாவட்ட காவல்நிலையங்களுக்கு அவரின் புகைப்படங்களை காவல்துறையினர் அனுப்பி தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கிடையே அசாமில் உள்ள பாஸ்கர் பெகுவின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாஸ்கரின் ஒரு மகன் மத்திய ரிசர்வ் காவல் படையிலும், மற்றொருவர் அசாம் காவல்துறையிலும் பணியாற்றி வருகிறார். தந்தை காணமல் போன தகவல் கிடைத்ததும், மகன்கள் இருவரும் கோவை வந்தனர். இவர்கள், காவல்துறையினருடன் இணைந்து தந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.