சென்னை:
குட்கா விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வீடு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, முன்னாள் காவல் துறை ஆணையர் ஜார்ஜ் வீடு  உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிபிஐ ரெய்டு நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான் மாசாலா, ’குட்கா’ உள்ளிட்ட போதைப் பொருட்கள்  தமிழகத்தில் விற்பனை செய்வதற்காக,  குட்கா ஊழல் வழக்கில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உள்பட சுகாதாரத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து குட்கா விற்பனையாளர்களிடம், ரூ.40 கோடி வரை  லஞ்சம் பெற்ற விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

இந்த விவகாரம் குறித்து   முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை டி.ஜி.பி ராஜேந்திரன்  தலைமை செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.  அதைத்தொடர்ந்து, தமிழக  தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,, உள்துறைச் செயலாளர் ஆகியோரையும் அவர் சந்தித்தார். அது பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில், குட்கா வழக்கில் தொடர்பு இருப்பதாக கருதப்படும் டிஜிபி டி.கே.ராஜேந்திரனின் முகப்பேறு இல்லம், மற்றும் முன்னாள் சென்னை மாநகர காவல்ஆணையர் ஜார்ஜ்-ன் மதுரவாயல் இல்லம், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு  உள்பட குட்கா வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள்  வீடுகள் உள்பட  40க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை 7.30 மணி முதல் ரெய்டு நடத்தி வருகின்றனர். இது தமிழக அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.