கோவை;
குட்கா வழக்கில் தொடர்புடைய வர்களை தமிழக அரசு உடனடியாக பதவி நீக்கம் செய்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கப்பலோட்டிய தமிழன், செக்கி ழுத்த செம்மலான வ.உ.சிதம்பரனாரின் 146வது பிறந்தநாள் புதனன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள வ.உ.சி நினைவு மண்டபத்திலுள்ள அவரது உருவச் சிலை மற்றும் அங்கு வைக்கப் பட்டுள்ள அவர் இழுத்த செக்கிற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன்பின் அவர் செய்தியாளர்களி டம் பேசுகையில், தற்போது மத்திய சிறையில் உள்ள வ.உ.சி.யின் நினைவு மண்டபத்தையும், அவர் பயன் படுத்திய செக்கையும் பொதுமக்கள் எளிதாக வந்து பார்த்துச் செல்லும் வகையில் அருகிலுள்ள வஉசி மைதானத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.மேலும், குட்கா விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் புதனன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர்கள் மீதும், காவல்துறை உயர்அதிகாரிகள் மீதும் சிபிஐ சோதனை நடத்துவது என்பது தமிழ்நாட்டிற்கே தலைக்குனிவாகும். இவ்வாறு ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு உள்ளானவர்களை உடனடியாக எடப்பாடி அரசு பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும். மாறாக, டிஜிபி ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்புச் செய்திருப்பது சரியானதல்ல. இதை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும், சிபிஐ மீதான நம்பிக்கை யை மக்கள் இழந்துவிட்டனர். காவல்துறை என்பது எப்படி தமிழக அரசு நினைப்பதை செய்கிறதோ, அதுபோல் மத்திய பாரதிய ஜனதா கட்சியின் எடுபிடியாக சிபிஐ செயல்படுகிறது. மத்திய அரசானது தனக்கு வேண்டாதவர் மீது மட்டுமே சிபிஐ-யை ஏவி தங்கள் பிடிக்குள் வரவைக்கும் செயலில் ஈடுபடுகிறது. மோடியின் எடுபிடியாக எடப்பாடியார் செயல்படுவதால் அவர் மீதும், அவரை சுற்றியுள்ளவர்கள் மீதும் எவ்வித நடவடிக்கை எடுப்பதில்லை. அதேபோல், மோடியை கையில் வைத்துக் கொண்டு விட்டால், எது வேண்டுமானாலும் செய்யலாம் என  எடப்பாடியார் நினைத்துக் கொண்டு  இருக்கிறார். ஆகவே, குட்கா வழக்கில் நேர்மையான அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

முன்னதாக, இந்நிகழ்வின்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்ம நாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜய்குமார் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம் உள்ளிட்ட பல உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: