சேலம்,
சேலம் வடமனேரியை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் கிராம இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றியத்தில் கஞ்சநாயக்கன்பட்டி மற்றும் தாராபுரம் கிராமம் உள்ளது. இந்த இரண்டு கிராமங்களுக்கும் மத்தியில் சுமார் 424 ஏக்கர் பரப்பளவில் வடமனேரி உள்ளது. வடமனேரிக்கு பண்ணப்பட்டி ஏரி நிரம்பி அதன் உபரி நீராலும், சரபங்கா ஆற்றின் நீராலும் ஏரி நிரம்புகிறது. கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு இந்த ஏரி முழுவதும் நிரம்பியது. கடந்த காலங்களில் இந்த ஏரி நிரம்பினால் இரண்டுகிராம விவசாயிகளும் மூன்றாண்டுக்கும் முப்போகமும் விவசாயம் செய்து வந்தனர். ஆனால், தற்போது ஏரியில்தண்ணீர் இன்றி வறண்டு வானம்பார்த்த பூமியாக உள்ளது.  பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்த ஏரியை பராமரிக்க அவ்வப்போது அரசு நிதி ஒதுக்கீடு செய்தாலும் பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததே தற்போதைய வறட்சி நிலைக்கு காரணம் என அப்பகுதியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, இந்த ஏரி முழுவதும் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. அதனால், ஏரியில் தண்ணீர் நிரம்பினாலும் உடனடியாக வடிந்து விடுகிறது. அதனால், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், நிலத்தடி நீர் மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆகவே, வடமனேரியை முறையாக தூர்வாரியும், சீமை கருவேல மரங்களை அகற்றிடவும் நடவடிக்கை எடுக்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், அரசு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கஞ்சநாயக்கன்பட்டி இளைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து ஆலோசனைகூட்டம் நடத்தினர். இதில், ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவது என்று முடிவெடுத்தனர். இதைத்தொடர்ந்து கஞ்சநாயக்கன்பட்டி வடமனேரியை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். இதன்படி இரண்டு பொக்லைன் வாகனத்தின் மூலம் ஏரியில் இருந்த முட்செடிகளையும், சீமை கருவேல மரங்களையும் அகற்றினர். மேலும் கரையோரமுள்ள மேடு, பள்ளங்களை மண்கொட்டி சமன்படுத்தினர். இதன்பின் பொக்லைன் மூலம் ஏரியை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். அப்பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் கூறுகையில், ஏரியை தூர்வாருவது தொடர்பாக அரசு நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே,எங்களது ஏரியையும், கிராமத்தில் எங்களால் செய்யமுடிந்த பொது பணிகளையும் நாங்களே செய்துகொள்ள முடிவு செய்துள்ளோம். இனிவரும் காலங்களில் விடுமுறை நாட்களில் இப்பணியை தொடர்ந்து மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.