கோபி,
கோபிசெட்டிபாளையம் அருகே செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிக்கு கிராம மக்கள் சார்பில் சீர் வழங்கும் விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே கோபிபாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் தூய திரேசாள் முதனிலைப் பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் மாணவ, மாணவிகள், பெற்றோர் – ஆசிரியர் கழகத்தினர் மற்றும் கிராமக் கல்விக்குழு முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆசிரியர் தினவிழாவையொட்டி பள்ளியின் வளர்ச்சிக்கும், மாணவர்களுக்கு தேவையான உபகரணங்களை அளித்து பள்ளிக்கு சீர் வழங்கும் விழாவாக கொண்டாடினர். இதில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஐந்து பெரிய அளவிலான தொலைக்காட்சி பெட்டிகள், ரூ.25 ஆயிரம் மதிப்பீட்டில் 50 நாற்காலிகள், ரூ.15 ஆயிரம் மதிப்பில் தோட்டக்கருவிகள் மற்றும் துப்புரவுப்பொருட்கள், ரூ.10 ஆயிரம் மதிப்பில் ஆசிரியர்களுக் பாராட்டு பரிசுப் பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகள் உள்ளிட்டவற்றை சீர் வரிசைகளாக ஊர்வலமாக எடுத்து வந்து ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கிராமமக்கள், குழந்தைகளின் பெற்றோர்கள், முன்னாள் மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.

சேலம்
சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. சேலம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கிவரும் அம்மாபேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் புதனன்று ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி துவங்கும் முன் மாணவர்கள் பலூன்களுடன் நுழைவாயிலில் ஆசிரியர்களை வரவேற்றனர். பின்னர் பள்ளி வளாகத்தில் சேலம் ஜென்னிஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம், கன்சியூமர் வாய்ஸ், கலாம் அறக்கட்டளை சார்பில் சிறந்த பள்ளி என்று விருது வழங்கி ஆசிரியர்களை கவுரவப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஜெனிஸ் நிர்வாகி கர்லின், பூபதி, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல், சேலம் கோட்டைஅரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அங்கு இருந்த ஆசிரியர் காலில் விழுந்து வணங்கியதுடன், ஆசிரியர்களின் சேவையை புகழ்ந்து பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.