தீக்கதிர்

ஆசிரியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற மாணவிகள்

திருப்பூர்,
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளி மற்றும் திருப்பூர் வடக்கு ஊராட்சி ஒன்றியம் தொரவலூர் நடுநிலைப் பள்ளியில் புதனன்று ஆசிரியர்களுக்கு மாணவிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும், ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து ஆசிரியர் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5 ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பல விதமாக கொண்டாடினர்.

இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் ஜெய்வாபாய் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முன்னாள் குடியரசு தலைவர் ஆசிரியர் ராதாகிருஷ்ணன் அவர்களின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், பள்ளிக்கு வருகை புரிந்த ஆசிரியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனால் ஆசிரியர்கள் மனநெகிழ்ந்தனர். இதே போல மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர் தினம் கொண்டாப்பட்டது.

தொரவலூர் நடுநிலைப் பள்ளி:
திருப்பூர் வடக்கு ஊராட்சி ஒன்றியம் தொரவலூரில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பெற்றோர்களும், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்களுக்கும் பேச்சுப் போட்டி, கவிதை கூறுதல், பாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. விழா முடிவில் அனைத்து ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் பா.செயலெட்சுமி பரிசு
வழங்கிப்பாராட்டினார்.