திருப்பூர்,
திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள அரசினர் தொழில்பயிற்சி நிலையத்தில் மூன்றாமாண்டு மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டதால் முதலாமாண்டு மாணவர்களுக்கும் மூன்றாமாண்டு மாணவர்களுக்குமிடையே செவ்வாயன்று மோதல் ஏற்பட்டது. மோதலையடுத்து பயிற்சி மையத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

திருப்பூர் தாராபுரம் சாலையில் அரசினர் தொழிற்பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் தொழிற்கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் முதலமாண்டு சேர்க்கை நிறைவுபெற்று கடந்த ஒரு வாரமாக முதலாமாண்டு மாணவ, மாணவிகள் பயிற்சி மையத்திற்கு வரத்துவங்கியுள்ளனர். இந்நிலையில் மூன்றாமாண்டு மாணவர்கள் சிலர், முதலாமாண்டு மாணவர்களை ராகிங் செய்துள்ளனர். இதற்கு கட்டுப்படாத மாணவர்களை இரண்டாமாண்டு மாணவர்கள் சிலர் தாக்கியுள்ளனர். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் மாணவர்களை எச்சரிக்கை செய்ததோடு காவல்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

இந்நிலையில் காவல்துறையினர் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே முதலாமாண்டு மாணவர்களை மூன்றாமாண்டு மாணவர்கள் தாக்கும் சம்பவங்கள் தொடர்வதாகவும், இதன் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: