புதுதில்லி;
ரபேல் ரக போர் விமான தயாரிப்பு தொடர்பான ஒப்பந்தத்தில், அனுபவமே இல்லாத ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ நிறுவனம் எவ்வாறு வந்தது? என்று பிரான்ஸ் நாட்டின் அரசுத் தொலைக்காட்சி சந்தேகம் கிளப்பியுள்ளது.

மேலும், ராணுவ தளவாடத்துறையில் 75 அனுபவம் பெற்ற, இந்திய பொதுத்துறை நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் புறக்கணிக்கப்பட்டது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து, 32 ரபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்கு காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்தபின் அந்த ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டது. முன்பு ஒரு விமானம் ரூ. 526 கோடி என்ற விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், மோடி அரசு ரூ. 1,670 கோடி கொடுத்து வாங்குவதென்று முடிவு செய்தது. மேலும், ரபேல் போர் விமான பாகங்களை தயாரித்து அளிக்கும் ஒப்பந்தம், அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் சர்ச்சை எழுந்தது.

ரிலையன்ஸ் நிறுவனம் லாபம் அடைவதற்கு சாதகமாக ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதுடன், இதன்மூலம் ரிலையன்ஸ் மட்டுமன்றி பாஜக-வினர் பல ஆயிரம் கோடி ஆதாயம் அடைந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டும் முன்னுக்கு வந்தது.

“அதிக விலை கொடுத்து, ரபேல் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது குறித்து மோடி விளக்கம் அளிக்க வேண்டும்; முறைகேடுகள் நடக்கவில்லை எனில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு மூலம் விசாரணைக்கு ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்தன.ஆனால், எந்தவிதமான முறைகேடும் இல்லை என்று மோடி அரசு இப்போது வரை ஊழலை மூடிமறைத்து வருகிறது.இந்நிலையில், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனம் இடம்பெற்றது குறித்து, பிரான்ஸ் நாட்டு ஊடகங்கள் சந்தேகங்களைக் கிளப்பத் துவங்கியுள்ளன.
குறிப்பாக, ‘பிரான்ஸ் 24’ என்ற அந்நாட்டு அரசு தொலைக்காட்சி, செய்தி ஒன்றை ஒளிபரப்பியுள்ளது.

அதில், “ஒருபுறம் ரபேல், தஸ்ஸால்ட், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் ஆகியவை, இந்திய ராணுவத்துறையின் 800.7 கோடி டாலர் மதிப்பிலான திட்டங்களில் 50 சதவிகிதம் அளவிற்கு முதலீடு செய்கின்றன; மறுபுறம் இந்திய அரசு, தனது சொந்த நிறுவனமும் – ராணுவ தளவாட உற்பத்தியில் 75 ஆண்டுகள் அனுபவம் பெற்ற நிறுவனமுமான இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் நிறுவனத்தின் அனுபவத்தைப் புறந்தள்ளி விட்டு, பிரதமர் மோடி அறிவிப்புக்கு 13 நாட்களுக்கு முன்னரே துவங்கப்பட்ட- எந்த அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்திற்கு ரபேல் ஒப்பந்தத்தில் முன்னுரிமை கொடுக்கிறது; இது எவ்வாறு? ” என்று கேள்வி எழுப்பியுள்ளது.பிரதமர் மோடிக்கும், அனில் அம்பானிக்கும் இடையிலான உறவையும் சுட்டிக்காட்டியிருக்கும் பிரான்ஸ் அரசுத் தொலைக்காட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

“2014 பொதுத்தேர்தலில் தனியார் நன்கொடையை அதிகம்பெற்ற கட்சி பாஜக-தான்” என்றும், “அம்பானி போன்றவர்கள்தான் பிரதமர் மோடியின் முதலாளித்துவ கூட்டாளிகள்” என்றும் சரியாக படம்பிடித்துள்ளது.மேலும், “59 வயதான அனில் அம்பானி, தொலைத்தொடர்பு துறையில் ஓரளவு வெற்றிபெற்றவர் என்றாலும், விமான தொழிற்துறையில் அனுபவம் அற்றவர்; அப்படியிருக்க ரபேல் ஒப்பந்தத்தில் அவரது நிறுவனம் இடம்பெறுகிறது என்றால், இந்தியாவின் இந்து தேசியவாத பிரதமருடன் அனிலுக்கு இருக்கும் நெருக்கம் மட்டுமே காரணமாக இருக்க முடியும்” என்றும் பிரான்ஸ் தொலைக்காட்சி உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: