ஈரோடு,
மனித மலத்தை மனிதன் அள்ளும் முறையை ஒழித்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அந்தியூர் தாலுகா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அந்தியூர் தாலுகாவின் 3 ஆவது மாநாடு செவ்வாயன்று அந்தியூரில் கே.ரமணி நினைவகத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு தாலுகா தலைவர் ஏ.முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் எம்.அண்ணாதுரை மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். ஆதித்தமிழர் பேரவையின் ஒன்றிய செயலாளர் ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் கு.தங்கராசு, விதொச தாலுகா செயலாளர் எஸ்.வி.மாரிமுத்து ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். இதைத்தொடர்ந்து முன்னணியின் தாலுகா செயலாளர் ஏ.கே.பழனிச்சாமி அறிக்கையை முன்வைத்து பேசினார். இம்மாநாட்டில் மனித மலத்தை மனிதனை கையால் அள்ளும் கொடுமையை ஒழித்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்தி வேண்டும். இரட்டை டம்ளர் முறை போன்ற தீண்டாமை கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அந்தியூர் பேரூராட்சிக்குட்பட்ட மந்தை மாரியம்மன் கோவில் வீதியில் வசிக்கும் 32 தலித் மற்றும் முஸ்லிம் சமூக மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். பஞ்சமி நிலங்களின் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி, அவற்றை தலித் மக்களுக்கே மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சங்கத்தின் புதிய தாலுகா தலைவராக ஏ.முருகன், செயலாளராக ஏ.கே.பழனிச்சாமி, பொருளாளராக ராஜா மற்றும் 21 பேர் கொண்ட தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், சிபிஎம் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன் மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.