புதுதில்லி:
கடந்த நான்காண்டு பாஜக ஆட்சியில் வராக்கடன்கள் பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின. ஆனால், வராக்கடன் அதிகரிப்புக்கு காரணமே காங்கிரஸ் கட்சிதான் என்று பிரதமர் மோடி உண்மையின்மீது ஒரு பெரிய பாறாங்கல்லைத் தூக்கி ஒரே போடாக போட்டார். தற்போது, அவருக்குப் போட்டியாக ‘நான் மட்டும் விடுவேனா?’ என்று நிதி ஆயோக் துணைத்தலைவரான ராஜீவ் குமாரும் களமிறங்கியுள்ளார். அவர் தன்பங்குக்கு, “கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவிற்கு காரணமே- முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்தான்” என்று கூறி மோடியை விஞ்சியுள்ளார்.

“பொருளாதாரப் பின்னடைவிற்கும், பணமதிப்பு நீக்கத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக எந்தவொரு ஆதாரமும் இல்லை; இது ஒரு பொய் குற்றச்சாட்டு. ப.சிதம்பரம் மற்றும் நமது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இதை உருவாக்கி விட்டனர்” என்று ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

“பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது வராக் கடன்களின் மதிப்பு ரூ. 4 லட்சம் கோடியாகத்தான் இருந்தது; 2017-ஆம் ஆண்டின் மத்தியில்தான் அது ரூ. 10 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக உயர்ந்தது.” என்று அவரை அறியாமல் உண்மையையும் ஒப்புக்கொண்டிருக்கும் ராஜீவ் குமார் “ஆனால், வராக் கடன்கள் அதிகரித்ததோடு பொருளாதார வளர்ச்சி பின்னடைவைச் சந்தித்தற்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன்தான் காரணம்” என்று கொஞ்சமும் பொருத்தமின்றி பழியைத் தூக்கிப் போட்டுள்ளார்.ரகுராம் ராஜன், 2016 செப்டம்பர் 4-ஆம் தேதி தனது பதவியிலிருந்து வெளியேறி விட்டார்; அதற்கு பின்னர் நவம்பர் 8-ஆம் தேதிதான் பணமதிப்பு நீக்கத்தையே மோடி கொண்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: