தீக்கதிர்

பாஜக தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி மனு

கோவை,
கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் செவ்வாயன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த ஞாயிறன்று பாஜக சார்பில் கோவில் சொத்துகள் மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் பாஜ கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில்: வருகின்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் அனுமதி மறுக்கப்பட்டால் காவிபடை காக்கிகளை அடக்கியாளும் சூழ்நிலை தமிழகத்தில் வரும் என மிரட்டும் தோனியில் பேசியுள்ளார். இவரின் பேச்சு தமிழகத்தில் பாதுகாப்பின்மையை உருவாக்குகின்ற வகையிலும், இருவேறு சமூகங்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.