சென்னை :

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை நோக்கி பாசிச பாஜக ஒழிக என முழக்கமிட்ட ஆராய்ச்சி படிப்பு மாணவி லூயிஸ் சோபியாவை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. மாணவியின் தந்தை அளித்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் மாணவியை நிபந்தனையற்ற ஜாமீனில் விடுதலை செய்தது.

கனடா நாட்டில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டுவரும் ஆராய்ச்சி மாணவி லூயிஸ் சோபியா தனது குடும்பத்தாருடன் சென்னையிலிருந்து அவரின் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றுள்ளார். அப்போது பாஜக மீது கடும் அதிருப்தியில் இருக்கும் மாணவி அதே விமானத்தில் தூத்துக்குடி வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை நோக்கி பாசிச பாஜக ஒழிக என மாணவி முழக்கமிட்டுள்ளார்.

பின்பு தூத்துக்குடி விமான நிலையத்தில் மாணவிக்கும், தமிழிசை சௌந்தரராஜனுக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து, விமானநிலைய காவல்துறையில் தமிழிசை புகார் அளித்தார். இதன் பின்பு தமிழக காவல்துறை மாணவியை கைது செய்தது. மேலும், மாணவிக்கு 15 நாட்கள் காவல் அறிவித்த நிலையில் மாணவியின் தந்தை அளித்த மனுவை விசாரித்த மாவட்ட குற்றவியல் நீதிபதி மாணவியை நிபந்தனையற்ற ஜாமீனில் விடுதலை செய்தார்.

மேலும், மாணவியை கைது செய்ததற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாணவியின் கைதிற்கு தனது கண்டனம் தெரிவித்துள்ளது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் மாணவியின் கைது கருத்துரிமைக்கு எதிரானது மற்றும் ஜனநாயக நாட்டில் ஒரு கட்சியை ஒழிக என கூறக்கூட முடியாத நிலை இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, கௌதமன் மற்றும் ப.ரஞ்சித் ஆகியோர் மாணவியின் கைதுக்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

மேலும், மாணவியை தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் தாகாத வார்த்தையில் திட்டியதாகவும், மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மாணவியின் தந்தை புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.