தீக்கதிர்

நூறு நாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்பு மறுப்பதா? அக். 9இல் காத்திருக்கும் போராட்டம் நடத்த மாநில மாநாடு அறைகூவல்…!

திருப்பூர்;
நூறு நாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதைக் கண்டித்து அக்டோபர் 9ஆம் தேதி மாநில ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் அலுவலகம் முன்பாக மிகப்பெரும் காத்திருக்கும் போராட்டத்தைக் கோரிக்கை நிறைவேறும் வரை நடத்துவதென தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 3ஆவது மாநில மாநாடு தீர்மானித்துள்ளது.

திருப்பூரில் செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்கி 4ஆம் தேதி வரை மூன்று நாட்கள் மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து 372 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மூன்றாம் நாளான செவ்வாயன்று மாற்றுத் திறனாளிகள் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சியுடன் நிகழ்வுகள் தொடங்கின.

விபத்தில் இறந்தவருக்கு அஞ்சலி
முன்னதாக இம்மாநாட்டு பேரணியில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பிய வேலூர் மாவட்டம் பச்சக்குப்பத்தைச் சேர்ந்த கன்னியம்மாள் என்ற பெண் மாற்றுத் திறனாளி தனது கிராமத்துக்குச் செல்லும் வழியில் விபத்தில் உயிரிழந்துவிட்டார். இவரது மறைவுக்கு மாநாட்டில் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அ.பிரமிளா மாநாட்டை வாழ்த்திப் பேசினார்.இதைத் தொடர்ந்து மாநாட்டு பிரதிநிதிகள் விவாதத்திற்கு தொகுப்புரையை பொதுச் செயலாளர் நம்புராஜன் வழங்கினார். 

                                                                            பா.ஜான்ஸிராணி

தீர்மானங்கள்
தமிழகம் முழுவதும் கிராமப்புற நூறு நாள் வேலை திட்டம் முழுமையாக முடக்கப்பட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை மறுக்கக்கூடிய நிலை உள்ளது. அரசு அதிகாரிகள் வேலை வழங்க மறுக்கின்றனர். இதைக் கண்டித்தும், மாற்றுத் திறனாளிகளுக்கு நூறு நாள் திட்டத்தில் வேலை வழங்க வலியுறுத்தியும் அக்டோபர் 9ஆம் தேதி சென்னையில் ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் அலுவலகம் முன்பாக மிகப்பெரிய காத்திருக்கும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாற்று திறனாளிகள் 75 சதவிகித கட்டண சலுகையுடன் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய அரசாணை உள்ளது. இது எல்லா பேருந்துகளுக்கும் பொருந்தும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளூர் பேருந்துகளில், குறிப்பாக நகரப் பேருந்துகளில் இந்த சலுகை மறுக்கப்படுகிறது. எனவே வரும் செப்டம்பர் 25ஆம் தேதி சென்னை பல்லவன் இல்லம் முன்பாக மிகப்பெரும் போராட்டம், கோரிக்கை நிறைவேறும் வரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

                                                                             எஸ்.நம்புராஜன்

மாற்றுத் திறனாளிகள் உரிமைகளைக் கேட்கும்போது பொய் வழக்குப் போட்டு கைது செய்யும் நடவடிக்கை, சிறையில் தள்ளும் போக்கு தொடர்கிறது. பழனியில் மாற்றுத் திறனாளிகள் கோரிக்கைக்காக தொடர் போராட்டங்களை நடத்தி வரும் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பகத்சிங் மீது பழனி கோட்டாட்சியர் ச.அருண்ராஜ் பொய் வழக்கு ஜோடிக்கவைத்து சட்டவிரோதமாக சிறையில் தள்ளும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். எனவே பழனி கோட்டாட்சியர் அருண்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கவும், பகத்சிங் மீதான பொய் வழக்கைக் கைவிடவும் வலியுறுத்தி மிகப்பெரும் முற்றுகைப் போராட்டம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டு ஊனமானோருக்கு அரசு வேலை நிவாரணம் வழங்க வேண்டும், பாசிச பாஜக அரசு ஒழிக என முழக்கமிட்டதால் கைது செய்யப்பட்ட சோபியாவை விடுதலை செய்ய வேண்டும், மாற்றுத் திறனாளிகள் குறை கேட்புக் கூட்டத்தை முறைப்படுத்தி நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

                                                                         கே.ஆர்.சக்கரவர்த்தி

நிர்வாகிகள் தேர்வு
இம்மாநாட்டில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராக – பா.ஜான்ஸிராணி, மாநிலப் பொதுச் செயலாளராக – எஸ்.நம்புராஜன், மாநிலப் பொருளாளராக கே.ஆர்.சக்கரவர்த்தி உள்பட புதிய மாநில நிர்வாகிகள், மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டனர். ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் பொதுச் செயலாளர் வி.முரளிதரன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். வரவேற்புக்குழுச் செயலாளர் டி.ஜெயபால் நன்றி கூறினார்.