திருப்பூரில் மூன்று நாட்கள் நடைபெற்ற தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் 3ஆவது மாநில மாநாட்டில் தொண்டர் குழுவினர் மனமுவந்து தொண்டு செய்தனர்.

குறிப்பாக, மாற்றுத் திறனாளி பெண்களுக்கு இயற்கை உபாதைக்கு செல்லவும், உணவருந்தவும், இதர உதவிகளுக்கும் என ஒவ்வொரு நிலையிலும் ஆண் தொண்டர்களும், பெண் தொண்டர்களும் கனிவுடன் உதவினர். மாநாடு நடைபெற்ற மண்டபத்தில் படிக்கட்டுகள் அமைந்திருந்த இடத்தில் சரிவுப் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. கழிப்பிடம், உணவுக்கூடம் என எல்லா இடங்களிலும் கவனத்துடன் இதுபோல் சரிவுப்பாதை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.மாற்றுத் திறனாளிகளில் கை இல்லாதோருக்கு கையாக, கால் இல்லாதோருக்கு கால்களாக அரவணைப்பை வெளிப்படுத்தி அசத்தினர் திருப்பூர் தொண்டர்கள். எத்தனையோ சம்பவங்கள் நெகிழச் செய்ததாக இருந்தாலும், (படத்தில்) பெண் தோழர் ஒருவர் உணவுக்கூடத்தில் இருகைகளும் இல்லாத தோழர் ஒருவருக்கு உணவினை ஊட்டி விட்டார். இது ஒரு சோறு பதம்தான்! குடிநீர் குடிக்கவும் சிரமப்பட்டவர்களுக்கு தாகம் தீர்த்தனர்.

தோழமையின் தொண்டுக்கு நிகர்தான் உண்டா? என பெருமிதப்படும் வகையில் இம்மாநாட்டில் தோழர்களின் தொண்டு வெகு சிறப்பாக இருந்தது. இது அனுபவத்தின் ஒரு பக்கம்தான். மாற்றுத் திறனாளிகள் மனம் மகிழ்ந்தனர் என்றால் தொண்டர்கள் இந்த அனுபவம் தங்களுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதது என்று கூறினர். மாற்றுத் திறனாளிகளை சக மனிதர்களாக கௌரவத்துடன் நடத்த வேண்டும் என்று எப்போதும் நாம் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் நேரடியாக இதுபோன்ற காரியங்களில் பங்கேற்கும்போதுதான் எதார்த்தத்தில் அவர்கள் எவ்வளவு கடுமையான சிரமத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை அறிந்துணர முடிகிறது. முன்னிலும் சிறப்பாக நாம் மாற்றுத் திறனாளிகளுக்கு சக தோழர்களாக பணியாற்ற வேண்டும் என்ற உந்துதலை ஏற்ப
டுத்தியிருக்கிறது என்றனர் இந்த தோழர்கள்! தோழமை என்பதொரு சொல் அன்றோ? என்ற கம்பனின் வரிகளுக்கு உயிர் கொடுத்தனர் தோழர்கள்!!

Leave a Reply

You must be logged in to post a comment.