திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு முகாம் இன்று துவங்கப்பட உள்ளது.

தமிழக அரசால் திறன் பயிற்சி, திறன் விழிப்புணர்வு மற்றும் சந்தையில் நிலவும் வேலைவாய்ப்புகள் பற்றி கிராமப்புற இளைஞர்களை சென்றடையும் வகையில் திருப்பூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் முகாம் நடத்தப்பட உள்ளது. அந்த வகையில், இன்று (புதனன்று) உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், செப்.6ம் தேதியன்று மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், செப்.7ம் தேதியன்று குடிமங்கலம், பெதப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு திறன் பயிற்சி விழிப்புணர்வு மேளா மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு முகாம் நடைபெறுகிறது.

காலை 11 மணியளவில் துவங்கும் இம்முகாம்களில் 5 ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை பயின்ற அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளலாம். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூலம் வங்கிப் பணியாளர் பயிற்சி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சி, தையல் (அடிப்படைத் தையல் இயக்குபவர்), தொழில்முறை தையல் இயந்திரம் இயக்குபவர், பெட் சைட் அசிஸ்டெண்ட், எம்ராய்டரி, டேட்டா அனலிஸ்ட் மற்றும் மென்திறன் போன்ற திறன் பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்நிறுவனங்களால் அளிக்கப்படும் பயிற்சிகளில் தாங்கள் விருப்பப்படும் திறன் பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.  இப்பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழும், தொடர்புடைய தனியார் துறைகளில் வேலைவாய்ப்பும் அளிக்கப்படுகிறது. மேலும், இப்பயிற்சியின் போது போக்குவரத்து செலவினம், பயிற்சி புத்தகம், எழுது பொருள் புத்தகப்பை போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே, இத்திறன் பயிற்சி விழிப்புணர்வு மேளாவில் கலந்து கொண்டு திறன்பயிற்சிக்கு பதிவு செய்து, விரும்பும் பயிற்சியை இலவசமாக பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: