திருப்பூர்,
திருப்பூர் வடக்கு குறுமைய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் அய்யங்காளிபாளையம் வி.கே. அரசு மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளது.

வடக்கு குறுமைய அளவில் நடைபெற்ற போட்டிகளில் மொத்தம் 65 பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் வி.கே. அரசு மேனிலைப் பள்ளி மாணவர்கள் கேரம், கபடி, வளைபந்து ஆகிய போட்டிகளில் முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.மேலும், கபடியில் பங்கேற்ற இப்பள்ளி மாணவர்கள் இருவரும், வளைபந்து போட்டியில் ஆறு பேரும், கேரம் போட்டியில் ஒருவரும் என மொத்தம் 9 பேர் மாநில அளவிலான போட்டிகளுக்குத் தேர்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாயன்று இப்பள்ளி வளாகத்தில் சாம்பியன்ஷிப் வென்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் சம்பத்ராஜ் தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் இராஜதுரை வரவேற்றார். செட்டிபாளையம் 3ஆவது வார்டு முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.மாரப்பன் சிறப்புரை ஆற்றினார். பள்ளி வளர்ச்சிக்குழுப் பொருளாளர் முருகேசன் வாழ்த்திப் பேசினார். பள்ளி வளர்ச்சிக்குழுத் தலைவர் குப்புசாமி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.

அத்துடன் மாணவர்களுக்கு கேரம் பலகைகள் வழங்குவதாகவும் அறிவித்தார். விளையாட்டு ஆசிரியர் டெய்சிராணி உள்ளிட்டோருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. பள்ளி வளர்ச்சிக்குழு உறுப்பினர் காளியப்பன் உள்பட மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். நிறைவாக விளையாட்டு ஆசிரியர் வேல்முருகன் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: