திருவாரூர் :

அகில இந்திய அளவில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதியன்று கோவாவில் நடைபெற்ற ஜுனியர் மகளிர் கால் பந்து போட்டிகளில் தங்கம் வென்ற தமிழ்நாடு கால்பந்து கழக அணியில்  தேர்வு செய்யப்பட்ட திருவாரூர் மாவட்டத்தின் இரண்டு மாணவிகள் எஸ்.பிரியதர்ஷினி மற்றும் பி.காவியா சவளக்காரன் பள்ளி மாணவிகளாவர். சவளக்காரன் அரசு ஆதிதிராவிடர் நல மேனிலை பள்ளியின்  இந்த சாதனை குழந்தைகளுக்கு சவளக்காரன் மக்கள் ஒன்று திரண்டு வரவேற்ப்பு அளித்தனர்.

சவளக்காரன் பேருந்து நிறுத்தத்தில் வந்திறங்கிய மின்னல் வேக கால்பந்து விளையாட்டு தாக்குதல் மற்றும் இடைநிலை தற்காப்பு வீராங்கனைகள் எஸ்.பிரியதர்ஷினி மற்றும் பி.காவியாவை அதிர்வேட்டுக்கள் முழங்க, நாதஸ்வர மேளங்கள் இசைக்க, சவளக்காரன் ஊர் மக்கள் திரண்டு வந்து வரவேற்றனர். பின்னர்  ஊர்வலமாய் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். வழிகள் நெடுக கிராமப் பெண்களின் ஆரத்தியுடன்  அன்பு எங்கும்  பொங்கி வழிந்தது. ஊர்வலம் பள்ளிக்கு வந்தடைந்தவுடன் பள்ளி தலைமையாசிரியர் ஆர்.ரவிச்சந்திரன் தலைமையில் பாராட்டு விழா துவங்கியது. கல்விக்குழு தலைவர் எஸ்.பாப்பையன், பி.நாகேஷ், ஜி.ரவிச்சந்திரன் மற்றும் சாந்தி விஜயகுமார் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பி.ராமமூர்த்தி் அனைவரையும் வரவேற்றார்.   ஆதிதிராவிடர் நல மண்டல இணை இயக்குநர் வி.குணசேகரன் சாதனை மாணவிகளுக்கு சால்வைகள் அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டி சிறப்புரையாற்றினார். ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், முன்னாள் மாணவர்கள் சாதனையாளர்களுக்கும் அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் வெ.முத்துக்குமாருக்கும்  பரிசுகள் வழங்கி பாராட்டினர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் வெ.முத்துக்குமார் நன்றி கூறினார்.

மொத்தமுள்ள 32 மாவட்டங்களில்  சேலம், நாமக்கல், கடலூர் மற்றும் திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலிருந்து மட்டுமே  தமிழ்நாடு கால்பந்து கழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் டெல்டா மாவட்டங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட இரண்டு மாணவிகளும் சவளக்காரன் அரசு ஆதிதிராவிடர் நல மேனிலைப்பள்ளி மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. வேறு எந்த பள்ளிகளிலும் இல்லாத இப்பள்ளி மாணவிகளின் விளையாட்டு மற்றும் தடகள திறமைகளைப் பற்றி 13.7.2017 அன்று தீக்கதிரில் சிறப்பு செய்தி கண்ணோட்டம் பிரசுரமாகியிருந்தது. இம்மாணவிகளின் நுட்பமான விளையாட்டு உத்திகளைக் கண்டு வியந்த ஜெர்மன் நாட்டு சுற்றுலாக்குழுவின் பான் நகரத்து விளையாட்டுத்துறை பயிற்றாசிரியரின் கருத்தோடு இப்பள்ளிக்குத் தேவையான விளையாட்டுத் திடல் இல்லாததையும் மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அக்கட்டுறையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இன்று வரை மாவட்ட நிர்வாகம் இதில் அலட்சியமாகவே இரு்பபதாக தெரியவருகிறது.  இப்பள்ளி மாணவ, மாணவிகள் 7 கிமீ தொலையில் உள்ள மன்னார்குடியில் உள்ள ஒரு பள்ளி மைதானத்தையே முறையான கடைசி நேர பயிற்சிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர் என்பதுதான் மிகப்பெரிய சோகம்.  கடந்த 1.9.2018 ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் 5000 மீட்டர் மாரத்தான் போட்டியில் முதலாவதாக வந்து அசத்திய மாணவி வி.காயத்ரிதேவி இந்த பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி.

ஏராளமான விளையாட்டு சாதனைகளை கொண்ட இந்த பள்ளி மாணவிகள் சாதாரண ஏழை எளிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள் ஆவர். இவர்களுக்கு தேவையான விளையாட்டுத் திடல் இல்லையே என்ற உறுத்தல் ஆய்விற்கு வந்த ஆதிதிராவிடர் நலத்துறையின்  மாவட்ட நிர்வாகத்திற்கும் வருவாய் மாவட்ட நிர்வாகத்திற்கும் இதுவரை வரவில்லை என்பதுதான் அதிர்ச்சியான உண்மை. கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக ஊடகங்களில் வந்து கொண்டிருக்கும் இப்பள்ளியின்  சாதனைகள் மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசிற்கும் இதன் அவசியத்தை உணர்த்தும் என கிராம மக்களும் விளையாட்டு ஆர்வலரும் எதிர்பார்க்கிறார்கள். இனியாவது மாவட்ட நிர்வாகம் உறக்கம் கலைக்குமா?

Leave a Reply

You must be logged in to post a comment.