மும்பை;
இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை சூறையாடிய, விஜய் மல்லையா, நீரவ் மோடி, லலித் மோடி போன்ற 28 பெருமுதலாளிகள் வெளிநாடுகளுக்குத் தப்பி, தற்போது அங்கு எந்தக் கவலையுமின்றி ஊர்சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களை இந்தியா கொண்டுவருவதற்கு, நடவடிக்கை எடுத்து வருவதாக மோடி அரசு நீண்டகாலமாகவே கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால், ஒருவரும் இந்தியா கொண்டுவரப்படவில்லை.13 இந்திய வங்கிகளிடம் சுமார் ரூ. 9 ஆயிரம் கோடியை மோசடி செய்தவர், சாராய ஆலை முதலாளி விஜய் மல்லையா. தற்போது இவரை மட்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இங்கிலாந்து நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு நடத்தி வருகிறது.ஆனால், தன்னை இந்தியாவுக்கு அனுப்பக் கூடாது என்றும், இந்தியச் சிறைகள் மிகவும் மோசமானவை; அங்கு போதுமான சுகாதார வசதி இருக்காது என்றும் மல்லையா கூறி வருகிறார். “நான் ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவன்; எனவே எனக்கு சுத்தமான சிறை வேண்டும்” என்று- புதிய காரணத்தையும் தெரிவித்து வருகிறார்.

ஏற்கெனவே, மல்லையா அவரது லண்டன் வீட்டில், தங்கத்தினால் ஆன கக்கூஸ் கோப்பையைக் கட்டி, ஆடம்பரமாக வாழ்ந்து வருபவர். இந்நிலையில், லண்டன் நீதிமன்றமும் மல்லையாவுக்கு போதிய வசதிகள் செய்துதரப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்து விட்டது.

நீதிமன்றம் சொல்லாவிட்டாலும் சிறையில் மல்லையா சொகுசாகத்தான் இருப்பார். அவருக்கு சேவகம் செய்யத்தானே மத்திய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். இப்போது நீதிமன்ற நிபந்தனை என்ற கூடுதல் காரணமும் கிடைத்து விட்டது. சொல்லவா வேண்டும்..?
தற்போது, மல்லையாவுக்காக மும்பை ஆர்தர் சாலை சிறைச்சாலையில்- 3 பேன், வெஸ்டர்ன் மாடல் டாய்லெட், 40 இன்ச் எல்சிடி டிவி, மருத்துவ வசதி, நூலகம் ஆகிய வசதிகளுடன் முற்றிலும் டைல்ஸ் பதிக்கப்பட்ட பளீர் என்றிருக்கும் சுத்தமான அறையை ஒதுக்கி, மத்திய அரசு தூள் கிளப்பி விட்டது.திடீரென, மல்லையாவுக்கு சொகுசு வசதி ஏற்படுத்தும்போது, அவரைப்போலவே வெளிநாடுகளில் இருக்கும் ஏனைய 27 கோடீஸ்வர குற்றவாளிகளும் கோபித்துக் கொண்டால் என்ன செய்வது? என்று நினைத்த மத்திய அரசு, தற்போது, கோடீஸ்வரக் குற்றவாளிகளுக்கு என்றே, தனியாக- ஐரோப்பிய பாணியில் நவீன வசதிகளுடன் கூடிய ஒரு புதிய சிறைச்சாலையையே நிர்மாணிப்பது என்று முடிவு எடுத்துள்ளது.

மும்பை ஆர்தர் சாலை சிறைச்சாலையின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு- கோடீஸ்வரக் குற்றவாளிகளுக்கான இந்த புதிய சிறைச்சாலை கட்டப்பட உள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பையும் பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.