தீக்கதிர்

கொலை முயற்சி நடக்கிறதா? பிரதமரின் எதிரே ஒரு பறவை கூட பறக்காது..! சிவசேனா கிண்டல்…!

மும்பை;
பிரதமர் மோடியை கொலை செய்வதற்கு சதி செய்ததாக, இடதுசாரி சிந்தனையாளர்கள், தலித் அறிவுஜீவிகள் 5 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில், பாஜக-வின் கூட்டணிக் கட்சியான சிவசேனாவும், கைது நடவடிக்கையைக் கண்டித்துள்ளது.“நக்சல்வாதிகள் ராஜீவ் காந்தியைக் கொன்றது போல, பிரதமர் மோடியையும் கொல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. பிரதமருக்கு தற்போது உச்சகட்ட பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. அவர் யாரையும் அருகில் சென்று சந்திப்பதில்லை. அவ்வளவு ஏன், ஒரு பறவை கூட பிரதமருக்கு எதிரில் பறக்க முடியாது. அவ்வாறு இருக்க, மகாராஷ்டிராவில் நகர்ப்புற நக்சலைட்டுக்கள் என்று நடந்துள்ள கைதுகள் தவறானவை” என்று சிவசேனா தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான “சாம்னா” தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.