கோயம்புத்தூர்;
குடிநீர் என் உரிமை, சூயஸே வெளியேறு என்ற முழக்கத்தை முன்வைத்து செப்.18ம் தேதியன்று கோவையில் வர்க்க வெகுஜன அமைப்புகளின் சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையான ஆதரவு அளிக்கும் என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிஷ்ணன் கூறியதாவது,

கோவை மாநகராட்சி நிர்வாகம் எதிர்வரும் 26 ஆண்டுகளுக்கு மாநகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்வது தொடர்பாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. மாமன்ற பிரதிநிதிகள் இல்லாத நேரத்தில் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து இதுநாள் வரை மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்க மறுத்து வந்தது. மேலும், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஒப்பந்த நகலை கோரியபோது மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் ஆகியோர் அதனை வெளியிட மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் தற்போது சூயஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான நகலை மாநகராட்சி நிர்வாகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதேநேரம், இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து யாரும் முழுவதுமாக அறிந்து கொள்ளக்கூடாது என்னும் வகையில் திட்டமிட்டு சுமார் 800 பக்கங்கள் கொண்ட 3 தொகுப்புகளாக அந்த ஒப்பந்த நகல் வெளியிடப்பட்டுள்ளது. அதுவும், நகல் படம் (ஸ்கேன்) எடுத்து பதிவேற்றம் செய்துள்ளனர். இவ்வாறு ஒப்பந்த நகலை வெளியிட்டுள்ளதிலும் மாநகராட்சி நிர்வாகம் மோசடியாக நடந்து கொண்டுள்ளது.

தண்ணீர் வியாபாரம்
ஏனெனில், சூயஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய்களை அள்ளித்தரும் இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதுவும் தண்ணீர் வியாபாரத்திற்கு பொருத்தமான இடம் கோவை என்பதை அறிந்தே சூயஸ் நிறுவனமானது ஒப்பந்தம் கண்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் 11 அணைகள் உள்ளன. மேலும், மற்ற நகரங்களில் எல்லாம் ஆறுகளில் இருந்து தண்ணீரானது மோட்டார்கள் மூலம் பம்ப் செய்து நீரேற்று மையங்களிலுள்ள தொட்டிகளில் (டேங்க்) நிரப்பப்பட்டு பின்னர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கோவை மாநகர மக்களின் தாகம் தணிக்கும் தண்ணீரான சிறுவாணி அணையிலிருந்து நேராக நீரேற்றும் தொட்டிக்கு செல்கிறது. இதனால் பம்ப் செய்ய வேண்டிய அவசியமோ, மின்சார செலவுகளோ கிடையாது. இவ்வாறு சூயஸ் நிறுவனத்திற்கு எவ்வித சிரமமும் இல்லாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் இங்கே ஏற்கனவே உள்ளன.

உயரும் கட்டணம்
நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், கோவையிலுள்ள பொதுக்குழாய்கள் மூடப்படும் என்றும், வீடுகளின் பரப்பளவிற்கு ஏற்ப இணைப்பு கட்டணம் நிர்ணயிக்கப்படும். மேலும் மாநகராட்சி நிர்வாகமே கட்டணத்தை நிர்ணயிக்கும் என தெரிவித்திருந்தார். ஆனால், இது முற்றிலும் தவறான தகவல் என்பது தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒப்பந்த நகலில் தெரியவந்துள்ளது. அதாவது, ஒப்பந்த நகலில் 21 -1 ல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

“கட்டுமானத்திற்கு கூடுதல் செலவானால் அதுகுறித்து மாநகராட்சியிடம் சூயஸ் நிறுவனம் கோரினால் கூடுதல் தொகை வழங்கப்படும். இதேபோல், மொத்த குறியீடு தொகை உயர்ந்தால் அதனை கோவை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும். இதையொட்டி குடிநீர் கட்டணத்தை உயர்த்தி கேட்டால் மாநகராட்சியானது கட்டணத்தை உயர்த்தி வழங்கும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, மாநகராட்சி நிர்வாகம் தான் குடிநீர் கட்டணத்தை நிர்ணயிக்கும் எனக் கூறுவது சரியல்ல.

மேலும், சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்படுவதற்கு முன்பு குடிநீர் இணைப்பிற்கான கட்டணம் ரூ.1000 என இருந்தது. ஆனால், தற்போது ரூ.5000 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த 24 மணிநேர குடிநீர் விநியோகம் தொடர்பான கட்டுமானத்திற்கான மதிப்பீடு குறித்த எவ்வித ஆய்வும் மேற்கொள்ளாமல் சூயஸ் நிறுவனத்திற்கு 646 கோடி ரூபாயை கோவை மாநகராட்சி வழங்கியுள்ளது. அதுவும், மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளில் வெறும் 60 வார்டுகளில் மட்டுமே இந்த கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

மண்டல அலுவலகங்கள் முற்றுகை
ஏற்கனவே, திருப்பூர் நகராட்சி நிர்வாகம் பெல்டல் என்ற நிறுவனத்துடன் 871.5 கோடி ரூபாய்க்கு குடிநீர் விநியோகம் தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆனால், இந்த ஒப்பந்தம் எவ்வித பயனும் அளிக்காததால் அது ரத்து செய்யப்பட்டது. இதேபோல், மத்தியப் பிரதேசத்தில் 23.5 கிலோ மீட்டர் நீண்ட ஆறு ஒன்று முழுவதுமாக தனியார் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது. அதை மக்கள் போராடி மீட்டனர். இதேபோல் இந்தியாவில் தில்லி, மைசூர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் குடிநீர் விநியோகம் போடப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் மக்களின் எதிர்ப்பிற்கு பின்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், பொலிவியா நாட்டில் பெக்டெல் நிறுவனம் கொசம்பாம்பா நகரிலும், எல்.ஆர்தோ மற்றும் லா பாஸ் என்ற நகரங்களில் சூயஸ் நிறுவனத்துடனும் அந்நகர நிர்வாகங்கள் மேற்கொண்ட குடிநீர் ஒப்பந்தங்கள் அனைத்தும் மக்களின் கடுமையான எதிர்ப்பிற்கு பிறகு ரத்து செய்யப்பட்டதுடன், அந்த நிறுவனங்கள் அனைத்தும் விரட்டியடிக்கப்பட்டது என்பதே வரலாறு. இவ்வாறு உலகம் முழுவதுமே குடிநீர் விநியோகம் தொடர்பாக தனியார் கார்ப்பரேட் கம்பெனியுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் மக்கள் போராட்டத்தால் ரத்தாகி உள்ளது. ஆகவே, தண்ணீர் ஒரு வியாபாரப் பொருளாக மாற்றும்போது அதை முறியடிக்க மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.

இதன் ஒருபகுதியாகவே, இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு), அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளின் நலச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு வர்க்க, வெகுஜன அமைப்புகளின் சார்பில் எதிர்வரும் செப்.18 ஆம் தேதியன்று கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டல அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் முற்றுகைப் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் என் உரிமை- சூயஸே வெளியேறு; சிறுவாணி எங்களின் அடையாளம் – சூயஸ் எங்களின் அவமானம் என்ற முழக்கத்தை முன்வைத்து நடைபெறும் இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கருப்பையா மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.பழனிச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.