சென்னை,
இந்தியாவில் மக்கள் நலனுக்காக போராடுபவர்கள், ஜனநாயக மாண்பை காக்க குரல் கொடுப்பவர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டு வருவதைகண்டித்து சென்னை மக்கள் மேடை மற்றும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை இணைந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர் என்.ராம் பேசியதாவது:- “மத்திய பாஜக அரசுக்கு எதிரான மாற்றுக்கருத்துள்ள சமூக செயல் பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் என பலரையும் கண்மூடித்தனமாக கைது செய்துவருகிறது. மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி போராளிகளுக்கு எதிராக கட்டுக் கதைகளை அவிழ்த்துவிடுகிறார். தீவிரவாதிகளைப்போல் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அருண் பெரேரா, கவுதம் நவ்லகா, பேரா. வெர்னோன் கோன்சல்வேஸ், போராளி சுதா பரத்வாஜ், எழுத்தாளர் வரவர ராவ் ஆகியோரை உடனே விடுதலை செய்ய வேண்டும். மாற்றுக்கருத்து சொல்வது, விமர்சிப்பது அடிப்படை உரிமையாகும். இந்தியாவில் பேச்சுரிமை மட்டுமல்ல அனைத்து ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. தமிழகத்தில் கூட பாஜகவின் நண்பர்களாக இருக்கும் அதிமுக ஜனநாயக உரிமைகளை மதிக்காமல் செயல்படுகிறது. 8 வழிச்சாலை எதிராகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் போராடுபவர்களை வேட்டையாடி வருகிறது.

தமிழகத்திலும் குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போக்கு உள்ளது மத்தியில் உள்ள பாஜக அரசு எதேச்சதிகாரத்தன்மையுடன் பாஜக இந்தியாவை ஆண்டுவருகிறது. மக்களின் நலனுக்காக போராட்டம் நடத்துபவர்களை அர்பன் நக்சல் என்று அழைப்பது முட்டாள்தனமானது. இவ்வாறு அவர் பேசினார். “மோடியின் ஆட்சி அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரகடனம் படுத்தியது போல் உள்ளது. சமூக செயல்பாட்டாளர்களை வீட்டுக்காவலில் வைத்து ஜனநாயகத்தை கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் கூட அசாதாரண சூழலில் உள்ளனர். பாசிச ஆட்சி மத்தியில் கோலோச்சுகிறது.மக்களுக்கு ஆதரவாக உண்மையை பேசினால், கைது , படுகொலை நடப்பது சர்வசாதாரணமாக உள்ளது. மதசார்பின்னையையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க மக்கள் ஒற்றுமை மேடை தேவைப்படுகிறது. போராட்டத்தின் மூலம் தான் உரிமையையும் உரிமையையும் பாதுகாக்க முடியும்” என்றார் தமமுக அப்துல்சமது.

கவிஞர் சல்மா:
கவிஞர் சல்மா பேசுகையில், சிறுபான்மை மக்களை கொல்லுபவர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்கிறது. எழுத்தாளர், சமூகசெயல்பால்டாளர்கள், கலைஞர்களை ஒருங்கிணைக்வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கவுரி லல்கேசை கொன்றவனுக்கு தான் கொன்றது யார் என்ற தகவலே தெரியவில்லை. அந்த அளவிற்கு முகம் தெரியாத கூலி கொலையாளிகளை கொண்டு முற்போக்காளர்கள் கொல்லப்படுகின்றனர். ஆகவே நாம் வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைய வேண்டும். மக்கள் விரோத மத்திய மாநில அரசுகளை புறக்கணிக்க வேண்டும்” என்றார். “தமிழகத்தில் மக்களால் தேர்வு செய்யப்படாத பாஜகவின் கைப்பாவையாக அதிமுக அரசு செயல்படுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறிய புகாருக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கருத்து சுதந்திரத்தை மதிக்காத எந்த அரசும் நமக்கு தேவையில்லை” என்று முத்தழகு (காங்) கூறினார்.

பேராசிரியர் கல்பனா:
பேரா.கல்பனா பேசுகையில், “மத்திய அரசு கைது செய்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட சமூக போராளிகள் பாசிசத்திற்கு எதிரான அமைப்பை உருவாக்குகிறார்கள். அதனால் அவர்கள் ஆபத்தானவர்கள் என்று இந்த ஆட்சியாளர்கள் சொல்வதன் மூலம் இதுபாசிச ஆட்சி என்பது உறுதி செய்து கொள்கின்றனர். கைது செய்யப்பட்டவரில் சுதாபரத்வாஜ் என்பவர் சதீஷ்கர், ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 30ஆண்டுகளாக ஆதிவாசி மற்றும் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக செயல்படுவது ஆட்சியாளர்களுக்கு கோப த்தை ஏற்படுத்துகிறது.

கொலை செய்ய ஒரு அமைப்பு:
முற்போக்காளர்களையும் இடதுசாரி பத்திரிகையாளர்களை கொலை செய்ய சனாதனசன்ஸ்தா என்ற இந்து மதவெறி அமைப்பு திட்டமிட்டு செயல்பட்டுவருகிறது. அர்பன் நக்சல் ஆபத்தானவர்கள் என்ற பதத்தை சில அர்பன் இடியட்ஸ் உருவாக்கி வருகின்றனர். இந்த வகுப்புவாத சக்திகளுக்கு உரமிடும் பணியை மத்திய அரசு செய்து வருகிறது” என்றார்.

மக்களை திரட்டுவோம்:
சமூக செயற்பாட்டாளர் ஓவியா பேசுகையில் “சமூக போராளிகள் திருமுருகன், வளர்மதி உள்ளிட்ட பலர் தீவிரவாதிகளைப்போல் நடத்தப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கேரள மக்களின் துயர்துடைக்க பொதுமக்களிடம் நிதி வசூல் செய்ய வளர்மதி அநாகரீக முறையில் கைது செய்யப்பட்டுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிகையை எதிர்த்து போராடிய வாலிபர் சங்கத்தினர் முரட்டுத்தனமாக கைது செய்யப்பட்டனர்.போராட்டக்காரர்களை தமிழ்நாடு காவல்துறையினர் நடத்தும் விதம்மிகவும் மோசமாக உள்ளது என்றார். ஆதார் அட்டையை மக்கள் மீது திணிக்கும் மத்திய அரசின் செயல்பாடு ஜனநாயக உரிமைக்கு எதிரானது இந்த வன்முறைக்கு எதிராக மக்களை திரட்டவேண்டும்” என்றார்.

விவசாயிகள் தோள்கொடுப்பர்:
விவசாய சங்கத் தலைவர் பெ.சண்முகம் பேசுகையில், “மத்திய பாஜக, மாநில அதிமுக அரசு மக்களின் ஜனநாயக போராட்டத்தை ஒடுக்குகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகளின் நடைபயணத்திற்கு மாநில அரசுஅனுமதி மறுத்துவிட்டது. அரசு திட்டத்தை எதிர்த்தால் அனுமதி தரமாட்டோம் என்று சொல்வதும் மாற்றுக்கருத்துக்கு வாய்ப்பளிக்க இந்த இரண்டு அரசும் அனுமதிப்பதில்லை. பாஜக, அதிமுக அரசுகளை எதிர்த்து மக்கள் ஒற்றுமை மேடை நடத்தும் போராட்டத்திற்கும், இயக்கத்திற்கும் விவசாயிகள் சங்கம் தோளோடு தோள் கொடுக்கும்” என்று கூறினார்.

அச்சத்தின் பிடியில் பாஜக:
தாவூத் மியாகான் “சிற்பி என நினைத்து மோடியிடம் இந்தியாவை ஒருபகுதி மக்கள் கொடுத்தனர் ஆனால் அவர் ஜல்லி உடைப்பவர்போல் இந்திய இறையாண்மையை சிதறடித்து வருகிறார். மோடியின் பாசிச ஆட்சி இனி ஆட்சி அதிகாரத்தைபிடிக்காமல் பார்த்துக்கொள்ளும் பணியை நாம் பார்க்கவேண்டும், இந்தியாவின் சிறந்த அறிவு ஜீவிகளை கைது செய்வது மூலம் பாஜக அச்சத்தின் பிடியில் இருக்கிறது என்று தெரிகிறது. நமது முழுமையான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.” என்றார்.

உளவியல் யுத்தம்:
எழுத்தாளர் மனுஷியபுத்திரன் “குடிமை சமூகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் திசைத்திருப்ப இந்துமதவாதிகள் மதவாத உரையாடலை அவ்வப்போது செய்து வருகின்றனர். மதவெறிக்கு எதிராக இருப்பவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதன் வீச்சு இன்னும் அதிகரிக்கும் சுதந்திரமான பத்திரிகையாளர்கள், சிந்தனையாளர்கள் கைது செய்வது தொடரும். போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசாங்கம் உளவில் ரீதியில் யுத்தம் தொடுத்து வருகிறது.

எச்.ராஜா தூண்டுதல்:
பாஜகவை சேர்ந்த எச்.ராஜா தூண்டுதலின் பேரில் எனக்கும் என்னை போன்ற எழுத்தாளர்களுக்கும் கொலை மிரட்டல்கள் வருகின்றன. தொலைபேசி, குறுஞ்செய்திமூலம் தகாதவார்த்தைகள் பேசிவருகின்றனர். நாங்கள் இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம். ஒத்தக்கருத்துள்ள கவிஞர்கள், பத்திரியாளர்கள், செயல்பாட்டாளர்கள், முற்போக்காளர்கள் ஒன்றிணைந்து ஒருவருக்கு ஒருவர் இறுக கைகோர்க்கும் நேரம் வந்துவிட்டது” என்றும் அவர்கூறினார்.  தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார், சென்னை மக்கள் மேடை நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், செல்வா உள்பட பலரும் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.