தீக்கதிர்

ஓமலூர் அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் வசதி

சேலம்,
ஓமலூரில் அரசு மருத்துவமனைக்கு விரைவில் நவீன சி.டி.ஸ்கேன் வசதி தொடங்கப்பட உள்ளதாக மருத்துவமனை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அரசு மருத்துவமனை ஓமலூர், காடையாம்பட்டி ஆகிய இரண்டு தாலுகாக்களின் தலைமை மருத்துவமனையாக உள்ளது. இதனால், இந்த மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும், 24 மணி நேரமும் பிரசவ வார்டு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ஆண்கள், பெண்கள் வார்டு ஆகியவையும் செயல்படுகிறது. உள்நோயாளிகளாக நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்றும் வருகின்றனர். அதேநேரம், ஓமலூர் அரசு மருத்துவமனையில் நவீன ஸ்கேன் வசதிகள் இல்லாததால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

இதனால் பெரும்பாலான நேரங்களில் நோயாளிகள் உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நிலை உள்ளது. இதனை தொடர்ந்து ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு நவீன ஸ்கேன் வசதி செய்திட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பபட்டு வந்தன. இந்நிலையில் ஓமலூர் மருத்துவமனைக்கு, அதிநவீன கருவியான சி.டி.ஸ்கேன் வசதி ஏற்படுத்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், அதற்கான இடம் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது என மருத்துவமனை இணை இயக்குநர் தெரிவித்துள்ளர்.