சேலம்,
சேலம் மாநகராட்சி 37 வது வார்டில் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோரி அப்பகுதிமக்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகரம் 37 ஆவது வார்டுக்கு உட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் கழிப்பிட வசதியில்லாததால் அப்பகுதியினர் திறந்த வெளியில் மலம் கழித்து வருகின்றனர். இதன்காரணமாக பெண்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், கழிப்பிடம் இல்லாததால் பல்வேறு தொற்றுநோய்களுக்கும் அப்பகுதியினர் உள்ளாகி வருகின்றனர். ஆகவே, இப்பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும. மேலும், இங்குள்ள மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியிலுள்ள ஓடையை தூர்வாருவதுடன், ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். தெருவிளக்கு மற்றும் வீடுகளுக்கு உடனே மின் இணைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் செவ்வாயன்று அம்மாபேட்டையிலுள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பின் மாநாகராட்சி அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். இம்மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: