நாகர்கோவில்:
மத்திய மாநில அரசுகள் 2 லட்சத்துக்கும் அதிகமான பொதுப்பள்ளிகளை மூடுவதற்கு நடத்தும் முயற்சியை அனுமதிக்க முடியாது என இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் விக்ரம்சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அனைவருக்கும் தரமான, அறிவியல்பூர்வமான கல்வி பாகுபாடின்றி வழங்க வேண்டும் என்ற முழக்கத்துடன் இந்திய மாணவர் சங்கம் சார்பில் அகில இந்திய அளவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் மற்றும் அகர்தலா முதல் அகமதாபாத் வரை பிரச்சார பயணம் நடைபெறுகிறது. இந்த பயணம் திங்கள்கிழமையன்று கன்னியாகுமரியில் துவங்கியது.

பயண துவக்க நிகழ்ச்சிக்கு, மாநில தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் துவக்கவுரையாற்றினார். பொதுச்செயலாளர் விக்ரம் சிங், அகில இந்திய தலைவர் ஷானு, மாநில செயலாளர் வீ.மாரியப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் காவ்யா, கேரளா மாநில தலைவர் பினீஸ் ஆகியோர் உரையாற்றினர்.

கன்னியாகுமரியிலிருந்து அகில இந்திய தலைவர் ஷானு தலைமையிலான பயணத்தை பொதுச்செயலாளர் விக்ரம் சிங் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மாவட்டச் செயலாளர் ஜெஸின், மாவட்டத் தலைவர் பதில்சிங், மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஆர்.செல்லசுவாமி, விவசாயிகள் சங்க நிர்வாகி முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இல்லாத கல்விக் கொள்கை

இப்பயணத்தையொட்டி இந்திய மாணவர் சங்க அகில இந்திய பொதுச்செயலாளர் விக்ரம் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய மாநில அரசுகள் நாடுமுழுவதும் உள்ள பொதுக்கல்வியை, அது உயர்கல்வியாக இருந்தாலும் பள்ளிக்கல்வியாக இருந்தாலும் அவற்றை சீரழிக்க முயற்சித்து வருகின்றன. கடந்த 2017 – 18 ஆம் ஆண்டு முதல் 2 லட்சத்துக்கும் அதிகமான பொதுப்பள்ளிகளை மூட முயற்சித்து வருகின்றன. அதை அனுமதிக்க முடியாது. பொதுக் கல்விக்கான நிதியை மத்திய அரசு குறைத்துள்ளது. பொதுக்கல்வி நிறுவனங்களை விட தனியார் கல்வி நிறுவனங்கள் சிறந்தவை என்ற தவறான, வளர்ச்சிக்கு எதிரான பிம்பத்தை உருவாக்கி வருகின்றன. உயர் கல்வியில் பல்வேறு விதமான கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. மத்திய அரசுக்கு ஒரு உருப்படியான கல்விக்கொள்கை என்பது இல்லை.

கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என அறிவித்தார். ஆனால் இதுவரை மோடி அரசுக்கு கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் எந்த ஒரு கல்விக்கொள்கையும் இல்லை. அவர்கள் இந்த நாலரை ஆண்டு காலத்தில் தரமான கல்விக் கொள்கை உருவாக்குவதில் தோல்வியடைந்து விட்டது. இது மத்திய அரசு, கல்விக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

ஆனால், அவர்கள் என்ன செய்கிறார்கள்?ஆனால் அவர்களுடைய மக்களுக்கு எதிரான, மாணவர்களுக்கு எதிரான, கல்விக்கு எதிரான கொள்கைகளை திட்டங்களை நடைமுறைப் படுத்துகிறார்கள். அவர்கள் நல்ல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும், நல்ல விவாதங்களை எழுப்பிவரும் தரமான பொதுக்கல்வி நிறுவனங்கள் மீது தனியார் நிறுவனங்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி ஜேஎன்யு, பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் போன்ற பொதுக்கல்வி நிறுவனங்களை அழிக்க தனியார் நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கிறார்கள்.

யுஜிசி கலைப்பு பேராபத்து
உயர்கல்வி நிறுவனங்களின் தேவைக்கேற்ப நிதி அளித்து உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் அமைப்பான பல்கலைக்கழக மானியக்குழுவை (யுஜிசி) கலைத்து விட்டு உயர்கல்வி நிதி ஆணையத்தை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் அவர்கள் தரமான கல்வியை உருவாக்கவில்லை. அவர்கள் கல்வியை சந்தைப்பொருளாக, வனிகப்பொருளாக மாற்றிவிட்டார்கள். கல்வியை கடைச்சரக்காக, ஒரு வணிகப்பொருளாக மாற்றி அதன் மூலம் லாபம் அடைய நினைக்கிறார்கள். தற்போது அவர்கள் உருவாக்கியுள்ள உயர்கல்வி நிதி ஆணையம் நேரடியாக மனிதவளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

இதனால் பொதுக்கல்வி நிறுவனங்கள் அரசின் தவறான கொள்கைகளுக்கு ஆதரவாக செயல்பட்டால் அந்த நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கவும், அரசின் தவறான பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் அந்த நிறுவனங்களுக்கு நிதியுதவியை மறுக்கவும் முடியும். இது இந்தியாவின் கூட்டாட்சிப் பண்புக்கு எதிரானது. ஏனென்றால் மாநில பல்கலைக்கழகங்கள் மாநில அரசுக்கு சொந்தமானவை. மாநில அரசுகளுக்கு மாநில பல்கலைக்கழகங்களின் மீது உரிமையும், தனித்து இயங்கும் உரிமையும் உள்ளது.
ஆனால் மத்திய அரசு இதற்கு எதிராக கல்வியை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவர முயற்சிக்கிறது. மாநில அரசுகள் மத்திய அரசின் இந்த திட்டத்தை எதிர்த்தாலும், மத்திய அரசு இதை நிறைவேற்ற முயற்சித்து வருகிறது.

அரசின் கல்விக்கொள்கைக்கு எதிராக போராடுபவர்கள் மீது ஆர்எஸ்எஸ் கும்பல்கள் தாக்குதல் தொடுத்து வருகின்றன. ஹைதராபாத் பல்கலைக்கழகம், அலிகார் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், ஐஐடி மெட்ராஸ் என அவர்களின் அடக்குமுறைகள் கல்விநிறுவனங்களின் மீது அதிகரித்து வருகின்றன. மத்திய அரசின் இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக நாடுமுழுவதும் இந்திய மாணவர் சங்கம் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்கிறது. இந்த பிரச்சாரப் பயணத்தின் மூலம், மத்திய அரசு பொதுக்கல்வி நிறுவனங்களை அழிப்பதை நிறுத்த வேண்டும், பல்கலைக்கழக மானியக்குழுவை கலைக்கும் முயற்சியை கைவிட வேண்டும், நீட் என்ற பெயரில் கல்வியை மத்திய அரசின் கீழ் கொண்டு வரும் முயற்சியை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பிரச்சாரப் பயணம் நடைபெறுகிறது இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: