தமிழக அரசால் இடமாற்றம் செய்யப்பட்ட சுற்றுசூழல்துறை செயலர் நசிமுதீனை ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவருடன் ஒருங்கிணைந்து செயல்பட தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து மதுரை உயர் நீதிமன்றம் மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவர் நியமனத்திற்கு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி 90 நாட்களுக்குள் விதிகளை வகுக்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு உத்தரவிட்டிருக்கிறது.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மாசு கட்டுபாட்டு வாரியத் தலைவராக இருந்த நசிமுதீனை பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் “தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக பணியாற்றி வந்த அதிகாரி நசிமுதீன் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். நசிமுதீனுக்குப் பதிலாக சுற்றுச்சூழல் துறை செயலாளராகவும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஷம்பு கல்லோலிகரும் சிறந்த அதிகாரி ஆவார். ஆனாலும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நசிமுதீனுக்கு இருக்கும் புரிதலும், அனுபவமும் புதிய அதிகாரி ஷம்பு கல்லோலிகருக்கு இருக்க வாய்ப்பில்லை.

அடுத்த சில நாட்களில் தேசியப் பசுமைத் தீர்ப்பாயக் குழுவின் விசாரணை தொடங்கவுள்ள நிலையில், அதற்குள்ளாக ஸ்டெர்லைட் குறித்த அனைத்து பின்னணி தகவல்களையும் அறிந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்வது சாத்தியமற்றதாகும். இது ஸ்டெர்லைட் விவகாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தும்.

எனவே, ஆகஸ்ட் 23 ஆம் தேதி தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத் தலைவராக இருந்த நசிமுதீனை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி விதிகளை உருவாக்க வேண்டும்” என மனுவில் கூறியுள்ளார்.

இதனை விசாரித்து வந்த மதுரை  உயர்நிதிமன்றம் முந்தைய விசாரணையின் போது ஸ்டெர்லைட் ஆலை குறித்து விசாரணைக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் சிறப்பு கமிட்டியுடன் சுற்றுச்சூழல் துறை செயலாளர் நசிமுதீன், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஷம்பு கல்லோலிகரும் ஒருங்கிணைந்து பணியாற்ற முடியுமா என அரசுத் தரப்பில் விளக்கம் கேட்டு தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கு மீண்டும் இன்று   நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சுற்றுசூழல் துறை செயலர் நசிமுதீன், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஷம்பு கல்லோலிகரும் ஒருங்கிணைந்து பணியாற்ற தமிழக அரசு மறுப்பதாகவும், ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்ய சிறப்பு கமிட்டி அமைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறைடு செய்துள்ளோம் எனவு அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலை குறித்த விசாரணைக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் சிறப்பு கமிட்டி விரும்பினால் சுற்றுச்சூழல் துறை செயலாளர் நசிமுதீன் கருத்தைக் கேட்கலாம் எனவும், தமிழக மாசுக் கட்டுபாட்டு வாரிய தலைவர், உறுப்பினர் பதவி நியமனத்திற்கு  உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் படி 90 நாட்களுக்குள் விதிகளை வகுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கினை முடித்து வைத்தனர்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாசுகட்டுப்பாட்டு செயலர் நசிமுதீனை தமிழக அரசுடன்  இணைந்து செயல்பட மறுப்பதன் மூலம்  தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறதோ என்ற எண்ணம் மக்களிடம் எழுந்திருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.