திருவனந்தபுரம்;
ஒக்கி புயலின்போதும், கேரள பெருமழை வெள்ளத்தின்போது, பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றுவதில் முனைந்து செயல்பட்ட 200 மீனவர்களுக்கு காவல்துறையில் பணி வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை, கேரள மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பெருமழை கொட்டியது. இதனால், அங்குள்ள 12 மாவட்டங்களில் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இடுக்கி, எர்ணாகுளம், பத்தனாம் திட்டா, வயநாடு, பாலக்காடு உள்ளிட்ட பல மாவட்டங்கள் நீரில் மூழ்கின.ராணுவம், கடற்படை, கடலோரக் காவல் படை, தேசியப் பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதையும் மீறி, கேரளாவின் பல பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் தொடர்ந்தது.அப்போது, அம்மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் பலர், தங்களது சொந்தச் செலவில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் மட்டும் சுமார் 65 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களைக் காப்பாற்றினர்.

‘கேரளத்தின் ராணுவம் எங்கள் மீனவர்கள்தான்’ என்று முதல்வர் பினராயி விஜயன் மிகவும் பெருமைபடக் கூறினார். அவர்களின் பணிக்கு நன்றி தெரிவித்த அவர், படகுகளின் பராமரிப்புக்கு என்று ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
ஆனால், அந்த உதவித்தொகையைக் கூட மீனவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். சொந்த சகோதாரர்களைக் காப்பாற்ற வேண்டியது எங்களின் கடமை; அதற்கு ஊதியம் எதற்கு? என்று கேட்டு தங்களின் பெருந்தன்மையை ஊரறியச் செய்தனர்.

எனினும், கடந்த ஆகஸ்ட் 29 அன்று திருவனந்தபுரத்தில் நடந்த அரசு விழாவொன்றில், மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்குச் சான்றிதழ் அளித்துக் கவுரவித்த கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு, ஏதாவது ஒருவகையில் மீனவர்களின் பணியை அங்கீகரிக்க வேண்டும் என்று திட்டமிட்டது. அந்த வகையில், மீட்புப் பணிகளில் ஈடுபட்ட மீனவர்களில் சுமார் 200 பேரை கடலோரக் காவல்படையில் நியமிக்க கேரள அரசு தற்போது முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே ஒக்கிப் புயல் பாதிப்பின்போதே இதற்கான உறுதிமொழியை முதல்வர் பினராயி விஜயன் வழங்கியிருந்தார்.

இதனை தற்போது நினைவுபடுத்தியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், “ஒக்கி புயல் பாதிப்பின்போதே, 200 மீனவர்கள் கடலோரக் காவல்படையில் நியமிக்கப்படுவார்கள் என்று தான் உறுதி அளித்திருந்தது” என்றும் “அதன்படி தற்போது 200 பேரை கேரள காவல்துறையில் தற்காலிக அடிப்படையில் நியமிக்க கேரள அமைச்சரவை கூடி முடிவெடுத்துள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.அது மட்டுமல்லாமல், மீன்வளத் துறையின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மீனவர்களைக் கொண்டு மீட்புக் குழு அமைக்கவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.