வெள்ளப்பிரளயத்தில் கேரளம் மூழ்கிக்கொண்டிருந்த போது தேவையான உதவிகளையும் நிதியும் அளித்து காப்பற்ற வேண்டிய மத்திய அரசு, அரசியல் சதுரங்கத்தில் ஒரு மாநிலத்தின் உயிர்க்குழாயை வெட்டி விளையாடியது. அதே சமயம் மாநில எல்லைகளை மட்டுமல்ல தேச எல்லைகளையும் கடந்து சதுரங்களும் வட்டங்களும் அற்ற மனிதாபிமானம் கேரளத்தை மீண்டும் மூழ்கடித்துக் கொண்டுள்ளது. அதையும் அணைகட்டி
தடுக்க முயற்சிக்கிறது மத்திய அரசு. 19,500 கோடி இழப்பு. உடனடியாக 2,000 கோடி வழங்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை தீவிரமாக செவிமடுத்த பிரதமர் நரேந்திர
மோடி அவர்கள், தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டிருந்த புன்முறுவலை வெளியே காட்டாமல் 600 கோடி நிவாரண நிதி அறிவித்தார்.

அதிலும் கேரளாவிற்கு அனுப்பிய அரிசிக்கான தொகை 233 கோடி, ஹெலிகாப்டர்,  இரணுவத்திற்கான வாடகை பிடித்துக்கொள்ளப்படுமாம். பிரதமர் மோடி அவர்கள் அறிவித்த 600 கோடியைவிட அதிக தொகையை 700 கோடிகளை வெளிநாடான ஐக்கிய அரசு அமீரகம் கேரளத்தின் மறுகட்டமைப்பிற்கு நிதியுதவியாக அளிக்க முன்வந்தது. அதுபோல் பல வெளிநாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் உதவித் தொகைகளை அறிவித்து வருகின்றன. ஆனால் மத்திய அரசின் கொள்கைகளின் படி அவற்றை அனுமதிக்க முடியாது என்கிறது மத்திய பி,ஜே,பி அரசு. வெளிநாட்டு நிதியை வாங்க மாட்டோம் என அனைத்து இந்தியத் தூதரகங்களுக்கும் அவசர அவசரமாக மின்னஞ்சல் அனுப்பியது. மத்திய அரசின் தேசியப் பேரிடர் கொள்கைகளின் படி அனுமதிக்க முடியும் என்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். கேரள பேரிடர் நிவாரணத்திற்காக வெளிநாட்டு நிதிகளை அனுமதிக்க முடியாது
என்ற மத்திய அரசின் நிலைபாடு சரிதானா என்ற விவாதம் இன்று நாடு முழுவதும் அரசியல் கரைகளையும் உடைத்துக்கொண்டு தேசத்தின் அனைத்து நதிகளிலும் வேகமாகப் பாய்ந்து கொண்டிருக்கிறது. சுனாமியும் மன்மோகன்சிங் அரசின் அணுகுமுறையும் இது நாங்கள் எடுத்த முடிவல்ல, 2004 ஆம் ஆண்டு மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு வகுத்த கொள்கை, திட்டம், முன்மாதிரி. அதைத் தான் நாங்கள் பின்பற்றுகிறோம் என்கிறது பி.ஜே.பி. அரசு. உணர்ச்சிவசப்பட்டு பல பிஜேபி விசுவாசிகள் வெளிநாட்டு நிதியை
அனுமதிக்கக்கூடாது என சட்டம் உள்ளது என சமூக வலைத்தளங்களில்
நியாயப்படுத்துகிறார்கள்.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு கொள்கையோ, திட்டமோ அல்லது சட்டமோ உள்ளதா ?. முந்தைய ஆட்சியிலோ முடிவு செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான கொள்கை/திட்டம் ஏதாவது வெளியிடப்பட்டுள்ளதா என்றால் அப்படி எதுவும் இல்லை என்பதுதான் உண்மை. மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு அப்படி எந்தவொரு
கொள்கையையோ திட்டத்தையோ வகுக்கவில்லை. அப்படி எந்தச் சட்டமும்
இயற்றப்படவில்லை. கொள்கை, திட்டம், சட்டம் என்று சொல்வதெல்லாம்
போட்டோஷாப் பித்தலாட்டம் அன்றி வெறொன்றும் இல்லை பராபரமே..

ஆனால் 2016 இல் மோடி அரசு வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வமான திட்டம் வெளிநாட்டு நிதிகளை ஏற்கலாம் என்கிறது. அப்படியென்றால் இவர்கள் சொல்கிற 2004 ஆம் ஆண்டில் என்ன நடந்தது. என்னதான் செய்தார் மன்மோகன்சிங். உண்மை என்னவென்றால் 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் தெற்காசியாவில் ஏற்பட்ட சுனாமி 14 நாடுகளின் கடற்கரைகளைப் புரட்டிப்போட்டது. மொத்தம் 2,30,00 பேர் உயிரிழந்தார்கள். இது ஒரு சர்வதேசப் பேரிடர். இதில் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை மாநிலங்களும் உருக்குலைந்தன. இந்தியாவில் 10,749 பேர் உயிரிழந்தார்கள். தமிழ்நாடுதான் மிகவும் பாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில்தான் உயிரிழப்புகளும் அதிகம். அப்போது மன்மோகன்சிங் அரசு வெளிநாட்டு நிதிகளை ஏற்கவில்லை. ஏனெனில் வெளிநாட்டு நிதிகள் தேவையில்லை, இந்திய அரசே தேவையான நிதியை சுயமாக அளிக்க முடியும் என்று வெளிப்படையாக அறிவித்தது. இது ஒரு கொள்கை முடிவல்ல. திட்டமும் அல்ல. வெறும் நிலைபாடு மட்டுந்தான். அப்போதைய நிலைமைக்கு ஏற்றவாறு அரசு எடுத்த முடிவு. அவ்வளவுதான். அதுபோலவே மன்மோகன்சிங் அரசு தமிழ்நாடு மாநில அரசுக்கும் பிற மாநில அரசுகளுக்கும் போதுமான நிவாரண நிதி அளித்தது. மோடி அரசு போல் மாற்றாந்தாய் மனப்பாண்மையோடு நடந்துகொள்ளவில்லை. காழ்ப்பு அரசியல் சதுராட்டத்தில் ஈடுபடவில்லை. தமிழகத்திற்கு 2600 கோடி நிவாரண நிதி
அளித்தது. தனிநபர்கள், நிறுவனங்கள், அமைப்புகளின் நிதியுதவிகளையும் சேர்த்தால் தமிழக அரசுக்கு மொத்தம் 5700 கோடி நிதி கிடைத்தது. இந்தியா வெளிநாட்டு நிதிகளை ஏற்கவில்லை. மாறாக இலங்கை, இந்தோனேசியா போன்ற வெளிநாடுகளுக்கு மொத்தம் 26 மில்லியன் அமெரிக்க டாலர் தொகை நிதியுதவி செய்தது. அப்போது வெளிநாடுகளுக்கு உதவி செய்யும் நிலையிலிருந்த இந்தியா, வெளிநாட்டு நிதி வேண்டாம் என்று எடுத்த நிலைபாடு யாருக்கும் ஆச்சரியம் அளிக்கவில்லை. அதேபோல் தமிழகத்திற்கும் பிற மாநிலங்களுக்கும் போதுமான நிதி அளித்ததால் இந்த நிலைபாடு விமர்சிக்கப்படவும் இல்லை.

ஆனால் தற்போது மோடி அரசு கேரளாவிற்கு போதுமான நிதி அளித்துள்ளதா என்றால் இல்லை. இருபாதினாயிரம் கோடி இழப்பு. உடனடியாக இரண்டாயிரம் கோடி
தாருங்கங்கள் என்றார் கேரள முதல்வர். பிரதமர் மோடி அறிவித்ததோ வெறும் 500 கோடி. அதைவிட அதிகமாக அமீரகம் அளிப்பதாகச் அறிவித்த 700 கோடியை மோடி அரசு நிராகரிப்பதால்தான், மோடி அரசின் கருணை உள்ளத்தின் மீது கருஞ்சாயம் பூசப்படுகிறது. அமீரகத்தின் 700 கோடியை அனுமதிக்கவில்லை என்றால் அந்தத்தொகையை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்று கேரள மக்கள் மட்டுமல்ல தேச மக்கள் கேட்கிறார்கள்.
அதற்கும் பதிலில்லை. உத்தரகாண்ட் பெருவெள்ளமும் உலகவங்கி உதவியும்
அடுத்து 2013 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் பெருவெள்ளத்தின் போது மன்மோகன்சிங் வெளிநாட்டு நிதிகளை மறுத்துவிட்டார் என்கிறார்கள்.
ஆனால் இதிலும் உண்மைகளை, தகவல்களைத் திரித்துத் திரி விடுகிறார்கள் சங் பரிவார் உறுப்பினர்கள். உத்தரகாண்ட் பெருவெள்ளம் ஒரு பேரிடர் என்பது உண்மைதான். மன்மோகன்சிங் வெளிநாட்டு நிதிகளை மறுத்துவிட்டார் என்பதும் உண்மைதான். அமெரிக்கா வழங்க முன்வந்த 1,50,000/- அமெரிக்க டாலர் தொகையையும் ( சுமார் 90 இலட்சம்), ஜப்பான வழங்க முன்வந்த தொகையையும் மறுத்துவிட்டது உண்மைதான். ஆனால் இதை மட்டுமே சொல்லி, கதையை முடித்துக்கொள்கிறார்கள் காவிக்
கதையாசிரியர்கள். அதன் பிறகு நடந்த உண்மைகளை வசதியாக மறைத்துவிடுகிறார்கள். வெளிநாட்டு நிதிகளுக்குப் பதிலாக மன்மோகன்சிங் அரசு உலகவங்கியில் கடன்வாங்கியது. உலகவங்கியின் செயல்திட்டத்தின் படி 1,747 கோடி ( 250 மில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பில்உத்தரகாண்டில் மறுகட்டமைப்புப் பணிகள் நடந்தேறின. (ஆதாரம் –
http://projects.worldbank.org/P146653?lang=en ) மத்திய அரசும் உத்தரகாண்ட் மாநில அரசுக்கு 1,000/- கோடி அளித்தது. அப்படியாக இழப்புகளுக்கும் மறுகட்டமைப்புகளுக்கும் போதுமான நிதியையும் உதவிகளையும் மத்திய அரசு மாநில அரசுக்கு செய்து கொடுத்தது. எனவே
விமர்சனங்களும் எழவில்லை. இருந்தாலும் உலகவங்கியில் கடன் பெற்று
நிதிச் சுமையை அதிகரிப்பதற்குப் பதிலாக வெளிநாட்டு உதவிகளை
ஒப்புக்கொண்டிருக்கலாம். உத்தரகாண்ட் விசயத்திலும் மன்மோகன்சிங் அரசு எடுத்தது வெறும் நிலைபாடுதான். அமித்ஷா வகையறா சொல்வதைப் போல் கொள்கையோ, திட்டமோ, சட்டமோ அல்ல. உலகவங்கியிடம் கடன் பெறக்கூடிய நிலைக்கு கேரள அரசு தள்ளப்பட்டால் அது மாநில மக்கள் மீது திணிக்கப்படுகிற பெரும் சுமையே. மத்திய அரசு தானும் செய்ய மறுக்கிறது. கிடைக்கிற உதவிகளையும் தடுக்கிறது என்பதுதான் இப்போது
பிரட்சனை. தேசியப் பேரிடர் மேலாண்மைத் திட்டம் – தடையில்லை இல்லாத கொள்கையையும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தத் துடிக்கிற நரேந்திர மோடி அரசு தானே உருவாக்கிய திட்டத்தை மறந்துவிட்டது. இதைத்தான் செலக்டீவ் அம்னீசியா என்பார்கள். “ தேசியப் பேரிடர் மேலாண்மைத் திட்டம்” என்ற திட்டத்தை உருவாக்கி கடந்த 01.06.2016 அன்று வெளியிட்டது. இதற்கு முன் மத்தியில் ஆட்சியில் இருந்த எந்த
அரசும் தேசிய பேரிடர் மேலாண்மைத் திட்டம் எதையும் வகுக்கவில்லை. இது தான் முதல் திட்டம். 159 பக்கங்கள் கொண்ட இந்தத் திட்டத்தில் 145 ஆவது பக்கத்தில் 9 ஆவது அத்தியாயத்தில் பிரிவு 9.2 இல் பேரிடரின் போது வெளிநாட்டு நிதியை ஏற்பது தொடர்பாக விரிவாக சொல்லப்பட்டுள்ளது. அதில் “ கொள்கை ரீதியாக தேசியப் பேரிடரின் போது, இந்திய அரசு எந்த வெளிநாட்டு உதவிகளுக்கு வேண்டுகோள் விடுக்காது. அதே சமயம் ஏதாவது வெளிநாட்டின் தேசிய அரசு நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக, பேரிடரில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக தாமாக முன்வந்து உதவியளித்தால் இந்திய அரசு அதை ஏற்கலாம்” என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் வெளிநாட்டு நிதியை ஏற்கலாம்என்கிறார்.

மோடி அரசு வகுத்த திட்டத்திலேயே வெளிநாட்டு உதவிகளை பெறலாம் என்று வெளிப்படையாக, தெள்ளத் தெளிவாக, எழுத்துபூர்வமாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டத்தை சீட்டுக்கடியில் ஒளித்துவைத்துக்கொண்ட மத்திய அரசு,
மன்மோகன் சிங் அரசு மீது பழிசுமத்துகிறது. முன்மாதிரி அல்ல – வெறுப்பரசியல்
2004 சுனாமியின் போதும் 2013 உத்தரகாண்ட் பெருவெள்ளத்தின் போதும் இப்படியான கொள்கை ஆவணம் அல்லது திட்ட ஆவணம் எதுவும் இல்லை. வெளிநாட்டு உதவிகளை பெறலாமா ? பெறக்கூடாதா என்பது குறித்த எந்த ஆவணமும் இல்லை. எனவே மன்மோகன்சிங் அரசு சூழ்நிலைக்கேற்ப நிலைபாடு எடுத்தது. ஆனால் தற்போது கேரளப் பேரிடரின் போது 2016 இல் மோடி அரசு வெளியிட்ட பேரிடர் திட்ட ஆவணம் உள்ளது.
அதைப் பின்பற்றுவதுதான் சரியாக இருக்கும். ஆனால் தானே உருவாக்கிய கொள்கையை திட்டத்தை மீறுகிறது மத்திய அரசு. தற்போது அமீரகத்தின் உதவியை மோடி அரசு மறுப்பது மன்மோகன்சிங் அரசின் முன்மாதிரியால் அல்ல. மோடி அரசின் வெறுப்பரசியல் மட்டுமே. அதற்கு மோடி அரசுக்கும் அதை வழி நடத்தும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் வரலாறு தக்க பாடம் கற்பிக்கும்.

Leave A Reply

%d bloggers like this: