தீக்கதிர்

வெளிநாடுகளில் தனியார் நிறுவனங்கள் வாங்கிய கடன் 74 சதவிகிதம் அதிகரிப்பு…!

புதுதில்லி:
வெளிநாடுகளில், இந்திய நிறுவனங்கள் வாங்கும் கடன் அளவு ஜூலை மாதத்தில் 74 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2017-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டுச் சந்தைகளில் 1.89 பில்லியன் டாலர் (13 ஆயிரத்து 440 கோடியே 73 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்) கடன் பெற்றிருந்தன. ஆனால் அது 2018 ஆண்டின் ஜூலை மாதத்தில் 2.18 பில்லியன் டாலராக (15 ஆயிரத்து 509 கோடியே 61 லட்சம் ரூபாய்) அதிகரித்துள்ளது.இந்த தொகை, கடந்தாண்டைக் காட்டிலும் 74 சதவிகிதம் அதிகமாகும்.

மேலும், இவ்வாறு பெறப்பட்ட மொத்தக் கடன் தொகையில் 1.75 பில்லியன் டாலர் அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முன்கூட்டிய ஒப்புதல்கள் இல்லாமலேயே (ஆட்டோமேட்டிக் ரூட்) பெறப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையே ஒப்புதல்கள் வாயிலாகப் பெறப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனம், அரசு ஒப்புதல் மூலம் 1 பில்லியன் டாலரைக் கடனாகப் பெற்றுள்ளது.

ஒப்புதல் பெறாமல், ஆட்டோமேட்டிக் ரூட் வழியாக அதிகபட்சமாக, தேவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்பரேசன் நிறுவனம் 240 மில்லியன் டாலரைக் கடனாகப் பெற்றுள்ளது. ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனம் 165 மில்லியன் டாலர், ஜி.இ. டீசல் லோகோமோட்டிவ் நிறுவனம் 121 மில்லியன் டாலர் என கடன்களை வாங்கியுள்ளன.