===அறிவுக்கடல்===
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 62 மெசஞ்சர் பணியிடங்களின் நியமன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓர் அலுவலகத்திலிருந்து மற்றோர் அலுவலகத்துக்குக் கடிதங்களை எடுத்துச்செல்லும் பணியான இது, பியூன் பணிக்கு இணையானதாகும். இதற்கான தகுதியாக 5ஆம் வகுப்புப் படிப்பும், சைக்கிள் ஓட்டத்தெரிவதும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 62 பணியிடங்களுக்கு சுமார் 93,500 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

அவற்றில் 3,740 பேர் எம்.பில்; அல்லது முனைவர் (பி.எச்டி.) படிப்பு முடித்தவர்கள். 28,050 பேர் எம்பிஏ உள்ளிட்ட முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள். 54,230 பேர் பி.டெக், பி.ஈ. உள்ளிட்ட பட்டப்படிப்பு முடித்தவர்கள். மொத்தம் வந்துள்ள 93,500 விண்ணப்பங்களில் 5லிருந்து 12 வகுப்புகள்வரை படித்துள்ளவர்கள் வெறும் 7,400 பேர் மட்டுமே.

ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த மோடியின் உண்மையான சாதனை என்ன என்பதை, புள்ளிவிபரங்களைவிடத் தெளிவாக இது உணர்த்தியுள்ளது. கருப்புப் பணத்திலிருந்து ரூ.15 லட்சம் மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் ‘ஜூம்லா’ என்று சொன்னதுபோல, ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியையும் வெளிப்படையாக `ஜூம்லா’ என்று கூறவில்லையே தவிர, உண்மை நிலை அதுவாகத்தான் உள்ளது. இதைப் பற்றிப் பேசினால், சமூக செயற்பாட்டாளர்களைக் கைது செய்ததைப்போல, பக்கோடா விற்காமல் மெசஞ்சர் பணிக்கு விண்ணப்பித்தது தவறு என்று இந்தப் பட்டதாரிகளையும் கைது செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Leave a Reply

You must be logged in to post a comment.