திருச்சிராப்பள்ளி:
திருச்சி முக்கொம்பு வெள்ளப்பெருக்கால் கொள்ளிடம் அணையில் கடந்த 22ம் தேதி இரவு 9 மதகுகள் உடைந்தன. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 24ம் தேதி பார்வையிட்டு ஒரு வாரத்தில் சீரமைப்புப் பணி முடிவடையும் என்றார்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் திங்களன்று காலை முக்கொம்பில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இந்த அணையை முன் கூட்டியே அரசு ஆய்வு செய்திருந்தால் இந்த உடைப்பை தடுத்திருக்க முடியும். அரசின் அலட்சியத்தால் இந்த அணை உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும். இன்று வரை 40 சதவீத பணிகள் கூட முடியவில்லை. ஆனால் 4 நாளில் பணிகள் முடியும் என முதல்வர் தெரிவித்திருந்தார்.

அணை ஏன் உடைந்தது என்று கேட்டால் நமக்கு காய்ச்சல் திடீரென வருகிறது. சொல்லிக் கொண்டா வருகிறது என முதல்வர் கேட்கிறார். ரோம் நகரம் தீப்பிடித்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல முதல்வர் பதில் அளிக்கிறார். காய்ச்சல் சொல்லாமல் வருகிறது. கமிஷன் சொல்லிக் கொண்டு வருகிறது.

கடந்த ஜூன் 19ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. 47 நாட்கள் ஆன நிலையில் இன்றும் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை. இதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி கால்வாய்களை தூர்வாரவில்லை. கமிஷனை தூர்வாருகிறார். தூர்வாருவதில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. மணல் கொள்ளை நடந்துள்ளது. இதனால் தான் இந்த அணை உடைந்து உள்ளது. அதனால் தான் அணைக்கு காய்ச்சல் வருகிறது.

எடப்பாடி அரசு கோமா நிலையில் உள்ளது. இந்த அணை உடைப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள், நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் இதுபற்றி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சி முக்கொம்பு மேலணையில் உடைந்த மதகு பகுதிகளையும், சீரமைப்புப் பணிகளையும் திங்கள்கிழமை பார்வையிட்ட பின் செங்கிப்பட்டி அருகே வறண்டு கிடந்த கரம்பா ஏரியை பார்வையிட்டார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் மாநில அமைச்சர் கே.என்.நேரு, திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் ஆகியோர் இருந்தனர்.

அப்போது மு.க.ஸ்டாலின், கரம்பா ஏரியில் தண்ணீரின்றி இருப்பது குறித்தும், அதற்குரிய காரணம் குறித்தும் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ.விடம் கேட்டறிந்தார். பின்னர் மு.க.ஸ்டாலினை அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சந்தித்து டெல்டா மாவட்டங்களில் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாதது குறித்தும், துார்வாரும் பணியின் மெத்தனம், முறைகேடு குறித்தும் விவரித்து புகார் மனு அளித்தனர். இதன் பின்னர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து திருவாரூர் புறப்பட்டு சென்றார்.

Leave A Reply

%d bloggers like this: