திருப்பூர்;
மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் ஊன்றுகோல், மூன்று சக்கர நாற்காலி, செயற்கை உறுப்புகள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி விதித்த இரக்கமற்ற கொடூரமான அரசு மத்திய அரசு என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. சாடினார்.

திருப்பூரில் ஞாயிறன்று மாற்றுத் திறனாளிகள் சங்க மூன்றாவது மாநில மாநாட்டுப் பேரணியின் நிறைவாக டவுன்ஹால் மைதானத்தில் நடைபெற்ற பொது மாநாட்டில் டி.கே.ரங்கராஜன் எம்.பி. சிறப்புரை ஆற்றுகையில் மேலும் கூறியதாவது:
நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வராது என்று உள்துறை அமைச்சர் சொல்லிவிட்டார். 2019 வரை முழுமையாக ஆட்சியில் இருந்து நாட்டின் தொழில், வேலைவாய்ப்பு, வர்த்தகம், கல்வி என அனைத்தையும் நாசமாக்குவது என்ற உறுதியுடன் பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது.

செல்லாத ரூபாய் நோட்டு, ஜிஎஸ்டி பிரச்சனையால் திருப்பூர் மட்டுமின்றி இராஜபாளையம், சிவகாசி என தொழில்துறையின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தின் இரு வழக்குகள் சிக்கி இருக்கின்றன. ஒரு வழக்கில் தீர்ப்பு கொடுத்துவிட்டார்கள். மருத்துவ படிப்பு ஆங்கிலத்தில்தான் படிக்க வேண்டும், எனவே சிறிய கேள்விகளுக்கே ஆங்கிலம் தெரியாவிட்டால் அவர்கள் எப்படி மருத்துவம் படிப்பார்கள் என சிபிஎஸ்இ வழக்கறிஞர் கேட்டிருக்கிறார். அப்படியானால் பஞ்சாயத்து போர்டு பள்ளியில் படித்த அப்துல்கலாம் ஜனாதிபதி ஆகியிருக்க முடியுமா? எண்ணற்ற சிறந்த மருத்துவர்கள் தமிழ் வழியில் அரசுப் பள்ளியில் படித்தவர்கள் உள்ளனர்.

இதுவரை இருந்த அரசுகளுக்கு மாற்றுத் திறனாளிகள் மீது ஒரு பரிவு இருந்தது, அனுதாபம் இருந்தது. ஆனால் அவர்கள் மீது அனுதாபம், இரக்கமே இல்லாத கொடூர அரசாக பாஜக அரசு, மாற்றுத் திறனாளிகளின் உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது.

நாட்டில் 7.4 சதவிகிதமாக இருக்கும் விதவைப் பெண்களுக்கு நாளொன்றுக்கு ரூ.8 மட்டும் ஒதுக்கக்கூடிய பாஜக அரசுதான் இந்த நாட்டைக் காப்பாற்றப் போகிறதா?
மாற்றுத் திறனாளிகள் கோரிக்கைகளை முழுமையாக மார்க்சிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. அவர்களது கோரிக்கைகள் நிறைவேற, போராட்டங்களுக்கு உறுதியான ஆதரவு தருவோம்.
இவ்வாறு டி.கே.ரங்கராஜன் கூறினார்.

இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது
இதையடுத்து ஊனமுற்றோர் உரிமைக்கான தேசிய மேடையின் செயலாளர் வீ.முரளிதரன் பேசுகையில், மாற்றுத் திறாளிகள் உரிமைக்கான போராட்டத்தில், பல்வேறு பிரச்சனைகளில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. இந்தியா முழுவதற்கும் உத்வேகம் அளிப்பதாக இந்த சங்கத்தின் செயல்பாடு உள்ளது. மத்திய அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்து அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தம்பட்டம் அடித்தது. ஆனால் கடந்த மூன்றாண்டுகளில் ஊடகங்களில் விளம்பர பிரச்சாரத்தைத் தவிர வேறு எந்த பணியும் நடைபெறவில்லை.

உதவித் தொகை, உயர் கல்வியில் 5 சதவிகிதம் வேலைவாய்ப்பில் 4 சதவிகிதம் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்துவது இல்லை. தனியார்மயக் கொள்கை காரணமாக அரசுத்துறை தனியார்மயம் ஆகிறது. இருக்கும் வேலைவாய்ப்பும் சுருங்கி வருகிறது. சட்டம் இருந்தாலும் விதிமுறைகளை உருவாக்கினால்தான் அதை நடைமுறைப்படுத்த முடியும். ஆனால் பல மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகள் சட்ட விதிமுறைகள் உருவாக்கப்படவில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான ஒற்றைச் சான்றிதழும் 90 சதவிகிதம் பேருக்குக் கிடைக்கவில்லை. அந்த சான்றிதழ் பெற்றவர்களும் அவற்றை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை.

பிரதமர் மோடி எதிர்க்கட்சியினரை விமர்சிக்கும்போது குருடர்கள் என்ற வார்த்தையை பிரயோகித்து விமர்சித்தார், மற்றொரு மத்திய அமைச்சர் எதிர்க்கட்சியினரை மனநலம் பாதித்தோர் என்று விமர்சித்தார். மாற்றாரை விமர்சிக்கும்போது மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்திக் காயப்படுத்தும் இதுபோன்று விமர்சிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.
இவ்வாறு முரளிதரன் பேசினார்.

அவரது ஆங்கில உரையை எம்.கிரிஜா தமிழில் மொழி பெயர்த்தார். பொது மாநாட்டில் அனைத்து தலைவர்களின் உரையையும் மாற்றுத் திறனாளிகள் புரிந்து கொள்ள சைகை மொழியில் வினோத் மொழி மாற்றம் செய்தார்.நிறைவாக மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டப் பொருளாளர் ஆர்.காளியப்பன் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.