அகமதாபாத்;
பிராமணர்களின் எதிர்ப்பு காரணமாக, குஜராத் மாநில ஏரி ஒன்றில் மீன்பிடிப்பதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

குஜராத்தில் உள்ள பிரதாப்சாஹர் ஏரியில் 5 ஆண்டுகள் மீன்பிடிப்பதற்கான டெண்டர், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில், மீனவர் சங்கம் ஒன்று பிரதாப் சாஹர் ஏரியை ஏலம் எடுத்தது. இந்த ஏரியில் 2017 முதல் 2022 வரை மீன்பிடித்துக் கொள்ளலாம் என்று சபர்கந்தா மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒப்பந்தமும் இறுதி செய்யப்பட்டது.

ஆனால், பிரதாப் சாஹர் ஏரியில் மீன்பிடிப்பது, பிராமண சமூகத்தினருக்கு எதிரானது என்று கூறி, ஹீராலால் பூனம்லால் ஜோஷி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். பயந்துபோன மாவட்ட நிர்வாகமும், மீன்பிடிப்பதற்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. பிரதாப் சாஹர் ஏரியில் மீன்பிடிக்க அனுமதி வழங்குவதால், இந்துக்களின் மத உணர்வு புண்படுகிறது; எனவே, ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என்று மாவட்ட நிர்வாகம் கூறியது.
இதனால் ஏலம் எடுத்த மீனவர் சங்கமும், அந்த சங்கத்தை நம்பியிருந்த மீனவர் குடும்பங்களும் கடந்த ஓராண்டாக வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட நிர்வாகம் தடையுத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது, குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர். முன்பு பொதுநல வழக்கைத் தொடர்ந்த ஜோஷியே மனுவைத் திரும்பப் பெற்றும்கூட, மாவட்ட நிர்வாகம் மீன்பிடிக்க அனுமதி வழங்காமல் உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, சபர்கந்தா மாவட்ட நிர்வாகத்திற்கு குஜராத் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: