===முனைவர். தி.ராஜ்பிரவீன்===
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாக நமது நெல் சாகுபடியில் முக்கியப் பங்கு வகித்தவை. விதை நெல்கோட்டைகள். குறிப்பாக காவிரி பாசனப் பகுதிகளில் அதிகமாக தஞ்சை மாவட்டங்களில் விதை நெல்லை சேமித்து பதப்படுத்தி, பக்குவப்படுத்தி வைக்கும் பழக்கம் நமது பாரம்பரிய விவசாயிகளிடம் காணப்பட்டது.

நெல் அறுவடைக் காலத்தில் நன்றாக விளைந்த நெல் வயலில் இருந்து பிற நெல் ரகம் கலக்காத விதை நெல்லை தேர்ந்தெடுக்க நெற்கதிர்களை தேர்வு செய்வார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படும் நெற்கதிர் கட்டுகளை களத்து மேட்டில் தனியாக அடித்து, விதை நெல்லை எடுப்பார்கள். பிறகு வீட்டுக்குக் கொண்டு சென்று இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு மிதமான வெயிலில் காய வைத்து பதப்படுத்துவார்கள். விதை நெல் நன்றாக காய்ந்து பதமான பின்னர் அவற்றை கோட்டையில் கட்டும் பணிகள் துவங்கும்.

சுத்தமான நெல் நீக்கப்பட்ட வைக்கோலைப் பயன்படுத்தி பிரி (கயிறு போல இருக்கும்) விடுவார்கள். இதன் மேல் வைக்கோலை பரப்பிய பின் காய வைத்த விதை நெல்லை வைக்கோலில் கொட்டுவார்கள். பிறகு வைக்கோலைப் பந்து போல் சுற்றி, பிரிகளைக் கொண்டு இழுத்து கட்டுவார்கள். பின்னர் பசுமாட்டின் சாணத்தை கொண்டு மெழுகுவார்கள். பசு மாட்டின் சாணத்தால் மெழுகப்பட்ட கோட்டைகளை வெயிலில் காய வைத்த பின்னர், வீட்டினுள் அடுக்கி வைப்பார்கள்.

12 மரக்கால் (ஒரு கலம்), 18 மரக்கால் (ஒன்றரைக் கலம்), 24 மரக்கால்(இரண்டு கலம்) என்று வெவ்வேறு அளவுகளில் கோட்டைகள் கட்டப்படும். கோட்டைக்குள் இருக்கும் விதை நெல் வைக்கோலின் கதகதப்பில் ஒரே விதமான தட்பவெப்ப நிலையில் வைத்து பராமரிக்கப்படும். பசும் சாணம் பூச்சிகளின் தாக்குதல் இல்லாமல் விதை நெல்லை பாதுகாக்கும். அடுத்த பருவ சாகுபடி வரை விதை கோட்டைகளை விவசாயிகள் தங்களின் வீட்டில் மிகவும் பாதுகாப்புடன் வைத்திருப்பார்கள்.

காவிரியில் தண்ணீர் வந்த பிறகு, சாகுபடி காலம் துவங்கும்போது தங்கள் கிராமங்களில் குளம் அல்லது குட்டைகளில் விதை நெல் கோட்டையை தூக்கிப் போட்டு ஊறவிடுவார்கள். ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊறிய பின் நெல் கோட்டையைக் கரையேற்றி நீரை வடிய வைப்பார்கள். இதன் பின்னர் நன்றாக தயார் செய்யப்பட்ட நாற்றாங்கால் வயலுக்கு நெல் கோட்டைகள் தூக்கி செல்லப்பட்டு, நெல் வரப்பில் வைத்து பிரிக்கப்படும். அப்போது குளத்து நீரில் ஊறிய விதை நெல் முளைக் கட்டிப் போய் இருக்கும். நன்றாக உழுது, பதப்படுத்திய வயலில் நெல் விதை தூவப்படும் (வீசப்படும்). இரண்டு முதல் மூன்று நாள்களில் அவை முளைக்கத் துவங்கும்.
தங்களின் தேவைக்கு போக மீதமிருக்கும் விதை நெல் கோட்டைகளை தங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சக தோழர்களுக்கும் வழங்குவது கிராமப்புறங்களில் வாடிக்கையான நிகழ்வு. சிலர் தங்களின் விதை நெல் கோட்டைகளை கொடுத்து தங்களுக்குத் தேவையான வேறு ரக நெல் கொண்ட பிறரின் நெல் கோட்டையை வாங்கிப் பயன்படுத்தும் போக்கும் நடைமுறையில் காணப்பட்டது.

இவ்வாறு பல பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் முயற்சியில் காவிரி பாசன பகுதிகளில் நெல் கோட்டைகள் முக்கிய பங்கு வகித்தது. ஒரு மறுக்க முடியாத உண்மை.

கட்டுரையாளர்: உதவிப் பேராசிரியர், வேளாண்மை விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

Leave a Reply

You must be logged in to post a comment.