புதுதில்லி:                                                                                                                                                                         பணமதிப்பிழப்பு நடவடிக்கை, இந்தியாவில் படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதனால் பிரதமர் மோடிக்கு தேர்தலில் தக்க பதிலடி கிடைக்கப் போவதாகவும் ‘தி கார்டியன்’ பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு வெளியாகும் ‘தி கார்டியன்’ பத்திரிகையின் இந்த கணிப்பு பாஜக-வினரை கலக்கம் அடைய வைத்துள்ளது.“பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 15 லட்சம் பேர் வேலையிழந்தனர்; 15 கோடி பேர் பல வாரங்கள் தினக்கூலி கிடைக்காமல் அவதிப்பட்டனர்” என்று கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ‘தி கார்டியன்’, “2016 நவம்பரில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது, ‘கறுப்புப்பண பேர்வழிகளை களையெடுக்கும் நடவடிக்கையே!’ என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்; ஆனால், இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பொருளாதாரம் கையை விட்டு நழுவிய பலூன் போன்று சுருங்கி விட்டது” என்றும் தெரிவித்துள்ளது.
மதிப்பு நீக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99.3 சதவிகிதம் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி கூறியதையும், பணமதிப்பு நீக்கம் தவறு என்றால் தண்டனை கொடுங்கள் என பிரதமர் மோடி அரைக்கூவல் விடுத்ததையும் நினைவுபடுத்தியுள்ள ‘தி கார்டியன்’ பணமதிப்பு நீக்க நடவடிக்கை மோசமான விளைவுகளை ஏற்படுத்தி இருப்பதால் பிரதமர் மோடிக்கு தேர்தலில் தக்க பதிலடி கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.
இதனாலேயே, பாஜக ஆளும் 3 மாநிலங்களுக்கு விரைவில் வரவுள்ள தேர்தலில் வெற்றி உறுதி என காங்கிரஸ் நம்பிக்கையுடன் உள்ளதாகவும் கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

 

Leave a Reply

You must be logged in to post a comment.