நாகர்கோவில்;
துணைவேந்தரை தேர்வு செய்ய நியமிக்கப்படும் தேர்வு குழுவை ( சர்ச் கமிட்டி) சேர்ந்தவர்களே கிரிமினல்களாக இருக்கும் போது, அவர்களால் தேர்வு செய்யப்படும் துணைவேந்தர் எப்படி இருப்பார்கள் என அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கேள்வி எழுப்பினார்.

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதற்கு அண்ணா பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசுவாமி தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர், நிர்வாக இயக்குநர் உள்பட ஏராளமான பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் பாலகுருசுவாமி செய்தியாளர்களிடம் கூறுகையதாவது: நாட்டில் உயர் கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் உள்ள சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் தமிழகத்தை சேர்ந்த 10 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றிருக்கும். பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்த, கல்வியில் உயர்ந்த, கல்விக்காக உழைக்கும், சுயநலமற்றவர்களை துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும். அரசும் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
தகுதியான துணைவேந்தரை நியமிக்கவேண்டும் என்றால் முதலில் மூன்று பேர் கொண்ட சிறந்த தேர்வு குழுவினர் நியமிக்கப் பட வேண்டும். ஆனால், துணைவேந்தரை தேர்வு செய்ய நியமிக்கப்படும் தேர்வு குழுவை ( சர்ச் கமிட்டி) சேர்ந்தவர்களே கிரிமினல்களாக இருக்கும் போது, அவர்களால் தேர்வு செய்யப்படும் துணைவேந்தர் எப்படி இருப்பார். விடைத்தாள் மறுமதீப்பீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணையை தமிழக அரசு சிபிஐ வசம் ஒப்படைத்தால் நல்லது.

நிர்மலா தேவி விவகாரத்தில், அவர் மாணவிகளிடம் நடந்துகொண்ட முறை சரியல்ல. பேராசிரியர்களே இப்படி நடந்துகொண்டால் மாணவர்களின் நிலை என்னாவது? வியாபார நோக்கில் கல்வி செயல்படுவதால் தான் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 550 பொறியியல் கல்லூரிகளில் 200 கல்லூரியில் 10 சதவீதம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. 100 கல்லூரிகளில் ஒரு சில மாணவர்களே சேர்ந்துள்ளனர். கல்வியை நல்ல தரத்துடன், சேவை மனப்பான்மையுடன் வழங்கினால் கல்வியின் தரம் உயரும்.

இந்தியாவில் ஏராளமான வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. இதற்கு ஏற்ப மாணவர்களை நாம் ஊக்கப்படுத்தி அவர்களின் திறமை தன்னம்பிக்கையை வளர்த்து அவர்களை தயார் செய்ய வேண்டும். மாணவர்கள் பாடத்தை மனப்பாடம் செய்யாமல் அதனை புரிந்து படித்தால் தான் பயன்கிடைக்கும். மாணவர்களை மனப்பாடம் செய்ய வைக்கும் டியூஷன் முறையை தமிழகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் என அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.