தீக்கதிர்

தானமாக வாங்கும் உடல் உறுப்புகளை  விற்கும் தனியார் மருத்துவமனைகள்  – விசாரணையில் அம்பலம் 

தமிழகத்தில்  இறந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாக பெறும் தனியார் மருத்துவமனைகள் அதனை வெளிநாட்டவருக்கு அதிக விலைக்கு விற்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன். இவர் கள்ளக்குறிச்சி அருகே வாகனத்தில் சென்ற போது கடந்த மே 18-ஆம் தேதி விபத்தில் சிகிக்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிக்சை பலனின்றி மணிகண்டன்  மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து  அவரது இதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றை மருத்துவமனை நிர்வாகம் தானமாக பெற்றது. ஆனால் அந்த உறுப்புகளை விதிகளை மீறி வெளிநாட்டவருக்கு பொருத்தப்பட்டது மணிகண்டனின் குடும்பத்திற்கு தெரிய வந்தது.

இதையடுத்து மணிகண்டனின்  உறவினர்கள் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து  தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர்  பினராயி விஜயன் உடல் உறுப்பு மோசடி குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தார். இதையடுத்து சுகாதாரத் துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாணை நடத்தப்பட்டது. விசாரணையில் தனியார் மருத்துவமனை ஒருவருக்கு தானமாக கொடுப்பதாக கூறிவிட்டு அந்த உறுப்பை வெளிநாட்டவருக்கு அதிக விலைக்கு தானமாக பொருத்தியது தெரியவந்தது. குறிப்பாக இதயத்தையும் உக்ரைன் நாட்டினருக்கு கொடுப்பதாக கணக்கு காட்டிவிட்டு லெபனான் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு பொருத்தியிருக்கின்றனர். இதே போல் நுரையீரலை தானமாக பெற உள்நாட்டை சேர்ந்த 5 நோயாளிகள் இருக்கும் போது அதை இஸ்ரேல் நாட்டவருக்கு பொருத்தியுள்ளனர். மேலும் தானமாக பெறப்பட்டதற்காக பராமரிக்கப்படும் பதிவேட்டில் எந்த வித குறிப்புகளையும் மருத்துவமனை நிர்வாகம் மேற்கொள்ளாததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விசாரணையின் போதே இதுபோன்ற ஏராளமான மோசடிகள் நடைபெற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்த அறிக்கையை அந்த குழு இன்று தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட  மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.