புதுதில்லி;
16-ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் திருப்பதி கோயிலுக்கு வழங்கிய விலை மதிப்பற்ற தங்க, வைடூரிய நகைகள் எங்கே போனது என்று மத்திய தகவல் ஆணையர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக விளக்கமான பதில் அளிக்க இந்திய தொல்லியல் துறை, ஆந்திர மாநில கலாச்சார அமைச்சகம், திருப்பதி திருமலா தேவஸ்தானம் ஆகியவற்றுக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயிலையும், அதன் நகைகள், சிலைகள், பாரம்பரிய பொருட்களைப் பாதுகாக்கும் வகையில் திருப்பதி கோயிலை தேசியச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பிரதமர் அலுவலகத்துக்குத் தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சாயர்லு கடிதம் எழுதியுள்ளார்.

பி.கே.எஸ்.ஆர். அய்யங்கார் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கிருஷ்ணதேவராயர் திருப்பதி கோயிலுக்கு அளித்த நகைகள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் கோயிலை வரலாற்று புராதனச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரி இருந்தார். ஆனால், அவரின் மனு பல்வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டும் நிறைவான பதில் கிடைக்கவில்லை.

இதையடுத்து, மத்திய தகவல் ஆணையத்தின் ஆணையரிடம் புகார் அளித்து, இந்த விவகாரத்தில் அனைத்து விவரங்களையும் வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.கே.எஸ்.ஆர். அய்யங்கார் வலியுறுத்தினார். இந்நிலையில் மத்திய தகவல் ஆணையம் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து மத்திய அரசுக்கும், ஆந்திர அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோயில் கல்வெட்டில் ஆதாரம்
இது குறித்து மனுதாரர் அய்யங்கார் கூறியதாவது:
திருப்பதி திருமலை தேவஸ்தானம் 1500 ஆண்டு பழமையான கோயில் அமைப்புகளைப் பாதுகாக்கவில்லை. 2011-ம் ஆண்டு விபரப்படி கோயிலையும், கோயிலைச் சுற்றி இருக்கும் புராதனப் பொருட்கள், இடங்களையும் புராதனச் சின்னங்களாக அறிவிக்க வேண்டும் என்ற திட்டமும் கிடப்பில் போடப்பட்டது.

கடந்த 2011-ம் ஆண்டு ஹைதராபாத் தொல்லியல் துறை இயக்குநர் அளித்த அறிக்கையில், 20 பேர் கொண்ட குழு திருப்பதி கோயிலின் பழைமையான சுவரை ஆய்வு செய்தனர். அதில் கோயிலுக்கு கிருஷ்ணதேவராயர் கோயிலுக்கு அளித்த நன்கொடைகள், நகைகள் விவரம் இடம் பெற்றுள்ளன என்று தெரிவித்தது. ஆனால், திருப்பதி திருமலை தேவஸ்தானமோ அப்படி எந்தவிதமான நகைகளும் கோயிலில் இல்லை. அதுபோன்ற நகைகளைப் பாதுகாக்கவும் இல்லை எனத் தெரிவித்தது.இவ்வாறு அய்யங்கார் குற்றம் சாட்டினார்.

1939ல் அளிக்கப்பட்ட நகைகள்
தகவல் ஆணையர் ஆச்சார்யலு கூறியதாவது:
முன்னாள் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் டி.பி.வத்வா, ஜெகந்நாதராவ் தலைமையில் சுய ஆய்வு செய்யும் குழுவை திருப்பதி திருமலை தேவஸ்தானம் அமைத்து தணிக்கை செய்தது. அந்தக் குழுவின் அறிக்கையில், கோயிலில் திரு ஆபரணப் பதிவேடு என்பது கடந்த 1952-ம் ஆண்டில் இருந்துதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் கிருஷ்ணதேவராயர் அளித்த நகைகள் குறித்து இடம் பெறவில்லை எனத் தெரிவித்தனர்.

அதாவது கடந்த 1952-ம் ஆண்டுக்கு முன் கோயிலில் இருந்த பாரம்பரிய நகைகள் குறித்த விவரம் முறையாகப் பராமரிக்கப்படவில்லை, பதிவேட்டிலும் இல்லை. ஆனால், அந்த நகைகள் கடந்த 1939-ம் ஆண்டு கோயில் அர்ச்சகரிடம் அளிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.
கோயிலின் விலைமதிப்பு மிக்க நகைகள் அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா, பதிவேட்டில் குறிக்கப்படுகிறதா? என்பது தெரியவில்லை. பழங்கால மற்றும் தற்போது பக்தர்கள் வழங்கும் நகைகளைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும், பதிவேட்டில் குறிக்கவும் என்ன மாதிரியான முறைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதும் தெரியவில்லை.

தணிக்கைக் குழு
மேலும், நகைகள் பாராமிப்பது குறித்து திடீரென ஆய்வு செய்து தணிக்கை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தும் அதற்கு அர்ச்சகர்கள் அனுமதி மறுக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், வத்வா கமிட்டி அளித்த அறிக்கையின்படி இதுவரை திருப்பதி தேவஸ்தானம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தப் பரிந்துரைகளை வெளிப்படையாக மக்களுக்கும் தெரிவிக்கவில்லை.

இது தொடர்பாக கடந்த 2009-ம் ஆண்டு ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநலமனுவை விசாரித்த நீதிபதிகள், வத்வா கமிட்டியின் பரிந்துரைகளை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தனர். கோயிலின் திரு ஆபரணங்களை பாதுகாப்பில் மெத்தனம் குறித்து கவலையும், வியப்பும் தெரிவித்திருந்தனர்.

அடுக்கடுக்கான கேள்விகள்
விஜயநகரப் பேரரசு காலத்தில் உருவாக்கப்பட்ட திருப்பதி திருமலைக் கோயிலைப் பாதுகாக்க வேண்டியது மத்திய தொல்லியல்துறையின் கடமையாகும்.மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம், தொல்லியல் துறை அமைச்சகம் ஆகியவை, மாநில அரசுகளோடு இணைந்து பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.இவ்வாறு ஆச்சார்யலு தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: